Ads (728x90)

எதிர்வரும் 27ஆம் திகதி தொடக்கம் அரசாங்கத்தின் அனைத்து பாடசாலைகளும் தரம் 11, 12 மற்றும் 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட இருப்பதாக கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொவிட்19 வைரஸ் தொற்று பரவுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள புதிய நிலைமைக்கு மத்தியில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் தினம் மற்றும் தரங்களுக்கான கற்கை நெறிகள் மற்றும் பரீட்சை நடைபெறும் தினங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக தரம் 11, 12 மற்றும் 13 வகுப்பு கல்வி நடவடிக்கைகள் காலை 7:30 மணி தொடக்கம் பிற்பகல் 3:30 மணி வரையில் நடைபெறும். ஏனைய தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படும்.

மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் போது சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள விசேட ஆலோசனைக்கு அமைவாக அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

2020 பொதுத் தேர்தலுக்காக பாடசாலைகளை ஏற்பாடு செய்தல் மற்றும் அது தொடர்பில் தெளிவுபடுத்தல் நடவடிக்கைகளுக்காக அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள் ஆகியோர் யூலை மாதம் 28,29,30 மற்றும் 31 ஆகிய தினங்களில் பாடசாலையில் இருக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதிக்குள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படாத வகையில் உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி தேர்தல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளில் வசதிகளை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அலோசனை வழங்கியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget