Ads (728x90)

ஜோர்தானில் அகல்காரா கெமல்வெகா தொழில்பேட்டையில் தொழில்களை இழந்துள்ள சுமார் 700 இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தில் அந்நாட்டு பொலிஸார் நேற்று முன்தினம் பிற்பகல் 4 மணியளவில் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா காரணமாக தொழில்களை இழந்து ஜோர்தானில் நிர்க்கதியாகியுள்ள இலங்கை பணியாளர்கள் மீதே இக்கண்ணீர்ப்புகைப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை தூதரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சென்ற சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கலைப்பதற்காகவே கண்ணீர்ப் புகை பிரயோகம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நான்கு மாதங்களுக்கு மேலாக நாடு திரும்புவதற்கு இவர்கள் கோரிக்கை விடுத்து வந்த போதிலும் அது தொடர்பில் தீர்மானிக்க கால அவகாசம் வழங்குமாறு தூதரக அதிகாரிகள் தொடர்ச்சியாக கூறியிருந்தனர்.

தீர்வு கிடைக்காததால் இந்த பணியாளர்கள் நேற்று அவர்கள் தொழில் செய்த இடத்தின் அதிகாரிகளை சந்தித்து தூதரக அதிகாரிகளையும் சந்திப்பதற்கு தீர்மானித்தனர்.

இதன் பிரகாரம் ஜோர்தானின் அம்மானிலுள்ள இலங்கை தூதரகத்தின் தொழில் பிரிவு அதிகாரிகள் மூவர் இலங்கை பணியாளர்களை சந்திப்பதற்கு சென்றிருந்தனர். தொழில்களை இழந்தவர்கள் தமது ஆதங்கங்களை வௌிப்படுத்திக் கொண்டிருந்தபோது தமக்கு மயக்கம் வருவதாக தூதரக அதிகாரி ஒருவர் கூறியதோடு, தூதரகத்தில் இருந்து வருகை தந்த அதிகாரிகள் புறப்பட்டு சென்றவுடன் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சுமார் 20 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அந்த சந்தர்ப்பத்திலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி தொழில்களை இழந்த இந்த இலங்கையர்களுக்கு நான்கு மாதங்களாக எவ்வித கொடுப்பனவும் கிடைக்கவில்லை என்பதுடன், நாளாந்தம் இரண்டு வேளை உணவு மாத்திரமே கிடைத்துள்ளது.

இதேவேளை குறித்த பணியாளர்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சென்ற இலங்கை தூதரகத்தின் தொழில் பிரிவு அதிகாரிகள் சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலாக பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டதாகவும், அந்த நிலைமையை தணிப்பதற்காகவும், தூதரக அதிகாரிகளை விடுவிப்பதற்காகவும் ஜோர்தான் பொலிஸார் அழைக்கப்பட்டதாகவும் இலங்கை தூதரகம் நேற்று அறிக்கையொன்றை விடுத்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget