கொவிட் 19 காரணமாக அவ்வப்போது உருவாகக்கூடிய அனைத்து சவால்களையும் எதிர்கொள்வேன் என தெரிவித்துள்ள அவர், சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படும் வரை இது இலங்கையில் பரவுவதை கட்டுப்படுத்துவேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அனைத்து சவால்களும் வெற்றிகரமாக எதிர்கொள்ளப்பட்டன என தெரிவித்துள்ள ஜனாதிபதி கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சில தரப்பினர் மறந்துவிட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கொவிட்-19 தொற்று ஏற்பட்டதனால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக கொவிட்-19 ஒழிப்பிற்காக விஷேட ஜனாதிபதி செயலணியுடனான சந்திப்பு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இனங்காணப்பட்ட நோயாளிகளுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையைக் கட்டுப்படுத்துவதோடு எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய சவால்களுக்கும் முகங்கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது.
பி.சி.ஆர். பரிசோதனைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு சமூகத்தில் பரவல் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். அத்தோடு கொரோனா ஒழிப்பிற்காக தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்களுக்கு மதிப்ப்பளிப்பதாகவும் இதன் போது ஜனாதிபதி தெரிவித்தார்.

Post a Comment