50.000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ளும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள், மேன்முறையீடு செய்யலாம் என அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
தொழில் வாய்ப்பை பெற்றிருந்தமை, ஊழியர் சேமலாப நிதிய அங்கத்துவம் கொண்டிருந்தமை, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றிருந்தமை, விண்ணப்பதாரி வெளிநாட்டில் இருந்தமை உள்ளிட்ட காரணங்களால் சிலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் மேலும் 10,000 பேருக்கு தொழில் வாய்ப்பை வழங்க ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, ஊழியர் சேமலாப நிதியத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள மற்றும் தொழிலொன்றில் ஈடுபட்டு வருவதன் காரணமாக நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் அவர்களை மேன்முறையீடு செய்யுமாறு அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் இணையத்தளமான www.pubad.gov.lk இல் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புக்கு அமைய தங்களது மேன்முறையீட்டினை தத்தமது பிரதேச செயலங்களுக்கு அனுப்பி வைக்குமாறு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment