Ads (728x90)

அதிகாலையிலேயே சென்று வாக்களிப்பினை மேற்கொள்ளுங்கள் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

தேர்தலுக்கான சகல பூர்வாங்க ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளன. நேற்று காலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகளும், சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களும் தேர்தல் மத்திய நிலையத்திலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தேர்தலில் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 584 வாக்காளர்களும், கிளிநொச்சி நிர்வாக மட்டத்தில் 92 ஆயிரத்து 264 வாக்காளர்களும் மொத்தமாக யாழ். தேர்தல் மாவட்டத்தில் 5 லட்சத்து 71 ஆயிரத்து 848 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.

அதேபோன்று யாழ்.நிர்வாக மாவட்டத்தில் 508 வாக்களிப்பு நிலையங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 107 வாக்களிப்பு நிலையங்களுமாக மொத்தம் 615 வாக்களிப்பு நிலையங்கள் யாழ். தேர்தல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கெண்ணும் நிலையங்களை பொறுத்தவரையிலே சாதாரண வாக்கெண்ணும் நிலையங்களாக யாழில் 73 நிலையங்களும், கிளிநொச்சியில் 14 நிலையங்களுமாக மொத்தம் 103 வாக்கெண்ணும் சாதாரண நிலையங்களும், அதேபோல் 16 தபால் மூல வாக்கு எண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் மொத்தமாக 7 பேர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படவுள்ளார்கள். அதற்காக 330 பேர் போட்டியிடுகிறார்கள். 19 அரசியல் கட்சிகளும் 14 சுயேச்சைக் குழுக்களை சேர்ந்த 33 கட்சிகளும் போட்டியிடுகின்றன.

இந்த தேர்தலில் தேர்தல் கடமைகளுக்கென 8,235 உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இந்த தடவை விசேடமாக சுமார் 450 உத்தியோகத்தர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கான பணியில் அமர்த்தியுள்ளோம்

இந்த தேர்தலில் சுகாதார நடைமுறைகளையும் அதனுடைய வழிகாட்டல்களையும் பின்பற்றி மேற்கொள்ள வேண்டிய கடப்பாடு காணப்படுவதன் காரணமாக அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் அதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை நேரகாலத்துடன் சென்று வாக்களிப்பினை மேற்கொள்ள வேண்டும். சுகாதார நடைமுறை மற்றும் சமூக இடைவெளியை பேணி முக கவசம் அணிந்து வாக்களிக்க வேண்டும்.
வாக்காளர்கள் எந்த பயமுமின்றி தங்களுடைய வாக்குரிமையை செயல்படுத்த முடியும். அதற்குரிய சுகாதார நடைமுறைகள் சம்பந்தமான விடயங்கள் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

05ஆம் திகதி வாக்களிப்பு முடிந்தவுடன் வாக்குப் பெட்டிகள் தேர்தல் மத்திய நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டு 06ஆம் திகதி காலை 7 மணி அளவில் வாக்கெண்ணும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.

நெடுந்தீவு பகுதி வாக்குப்பெட்டி வழமைபோன்று வான் மார்க்கமாக கொண்டு வருவதற்குரிய நடவடிக்கையினை தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது. அதே போல ஏனைய தீவு பகுதிகளுக்கான வாக்குப் பெட்டிகளும் கடற்படையின் உதவியுடன் எடுத்து வருவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம்.

எனவே தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மக்களும் அதிகாலையிலேயே சென்று வாக்களிக்களியுங்கள் என தெரிவித்துள்ளார்

Post a Comment

Recent News

Recent Posts Widget