Ads (728x90)

மன்னார் மறை மாவட்டத்தின் ஒய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசெப் ஆண்டகை இறைபதமடைந்ததை முன்னிட்டு 05.04.2021 ஆம் திகதி திங்கட்கிழமையை தமிழ் தேசிய துக்க தினமாக பிரகடனபடுத்துவதாக  வடக்கு – கிழக்கு சிவில் அமைப்புகள் அறிவித்துள்ளன.

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசெப் ஆண்டகை இயற்கை எய்திய செய்தியானது தமிழர் தேசத்தினை ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. ஆயர் அவர்களின் இழப்பானது தமிழர் தேசத்திற்கு அளவிடமுடியாத ஒரு பேரிழப்பாகும். 

அவரின் இழப்பால் தமிழ் தேசியம் ஒரு சிறந்த தலைவனை இழந்து நிற்கின்றது. தமிழரின் உரிமைக்காக மதங்களை கடந்து தேசியத்தின் பால் ஓங்கி ஒலித்த குரலை தமிழர் தேசம் இன்று இழந்து நிற்கின்றது .

2009 ஆம் ஆண்டு போர் மெளனிக்கபட்ட பின் தமிழர் தேசம் திக்கற்றவர்களாக நின்ற நேரம் அவர்களுக்கு நம்பிக்கை ஒளியாக விளங்கியவர். தமிழினத்தின் மீதான இனப்படுகொலையை, இறுதிப் போரில் கொல்லப்பட்ட போது மக்களின் எண்ணிக்கையை பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் பொது வெளியிலும், சர்வதேசத்திலும் அறுதியிட்டு தெரிவித்தவர்.

பாதிக்கப்பட்ட தமிழினத்தின் நீதி குரலாக, சாட்சியாக இருந்த மிகப்பெரும் ஆளுமையை நாம் இன்று இழந்து நிற்கின்றோம்.

ஆண்டகை அவர்களின் மறைவையொட்டி அவரால் தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று முதல் இறுதி வணக்க நிகழ்வு வரை வடக்கு-கிழக்கு இணைந்த தமிழர் தேசம் எங்கும் துக்கதினங்களாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் தேசிய துக்க தினமாகவும் பிரகடனபடுத்தப்படுத்துகின்றோம்.

இதற்கு தமிழ் தேசிய கட்சிகள், பொதுமக்கள் அனைவரும் ஆதரவு வழங்குவதுடன், திங்கட்கிழமை அனைவரும் தங்களின் வீடுகளிலும், பொது இடங்களிலும், வணிக நிலையங்களிலும் கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டும், உங்கள் உடைகளில் கறுப்பு பட்டிகளை அணிந்தும் துக்கத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

அதே நாளில் தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசம் எங்கும் வாழும் தமிழ் மக்களும் கறுப்புப்பட்டி அணிந்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று இது தொடர்பாக சிவில் அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget