20ஆவது திருத்தத்தைவிட 22ஆவது திருது்தம் நல்லது எனபதாலேயே அதனை ஆதரிக்கின்றோம் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்ற அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதிகாரத்திற்கு மேல் அதிகாரம் வேண்டும் என்று கூறிக்கொண்டு 20 ஆவது திருத்தத்தை கொண்டு வந்து நாட்டை அழித்துவிட்டு இப்போது எமக்கு ஆலோசனை வழங்க வருகின்றனர். எவ்வாறாயினும் எங்களின் நிலைப்பாடு 21 ஆவது திருத்தமாகவே உள்ளது.
21 ஆவது திருத்தத்தில் நாங்கள் முன்வைத்துள்ள பல்வேறு விடயங்களுக்கு சர்வஜன வாக்கெடுப்புக்கு போக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
எனினும் அவ்வாறு சர்வஜன வாக்கெடுப்புக்கு போவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. அத்துடன் 22 ஆவது திருத்தத்திற்கு நாங்கள் ஆதரவளிப்பதற்கான காரணம் அது நல்லது என்பதற்காக அல்ல. 20 ஆவது திருத்தத்தை விடவும் நல்லது என்பதனாலேயே என தெரிவித்தார்.
மேலும் இளைஞர்கள் வீதிக்கிறங்கி போராட்டம் நடாத்தி இருக்காவிட்டால் 22 ஆவது திருத்தம் வந்திருக்காது. அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி, பிரதமர் வீட்டுக்கு போவதற்கும் மக்கள் போராட்டமே காரணம் என்பதனை புரிந்துகொள்ளுங்கள். ஆனால் மக்கள் போராட்ட மூலம் மக்கள் கோரிய திருத்தம் 22ஆம் திருத்தத்தில் இல்லை.
நிறைவேற்று அதிகார முறைமை ஒழிக்கப்படவேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும் என அவர் தெரிவித்தார்.
22ஆம் திருத்தம் எமது கொள்கை அல்ல, 21ஆம் திருத்தமே எமது கொள்கை. எனினும் வங்குரோத்தடைந்த நாட்டை மேலும் வங்குரோத்து அடையாமல் அந்த நிலையில் இருந்து மீட்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் 22 ஆவது திருத்தத்தை ஆதரிக்கின்றோம் என்றார்.
Post a Comment