Ads (728x90)



இனப்பிரச்சினைக்கான தீர்விற்காக ஜனாதிபதி அழைத்த சர்வகட்சி கூட்டம்  ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

இச்சர்வகட்சி கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்சினை தீர்வுக்கான அவசியத்தை பற்றி முதலில் உரையாற்றினார்.

இதன் பின்னர் அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ச மற்றும் அலி சப்ரி ஆகியோர் உரையாற்றினர். இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம், அரசியல் கைதிகள் விவகாரத்தில் அரச தரப்பினால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை விபரித்தனர். 

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அலிசப்ரி தெரிவித்தார்.

குறித்த கூட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால் என்ன நடந்ததென்ற உண்மை கண்டறியப்பட்டு பொறுப்புக்கூறல் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்களின் பின்னர் தான் நல்லிண்ணக்க கூட்டத்தை கூடுகின்றீர்கள். இதற்கு நாங்கள் ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் என சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும். காணாமல் போனோர் தொடர்பில் இனி கதைக்க வேண்டாம். காணாமல் போனவர்களை கொன்றது நீங்கள். அதனால் இதைப் பற்றி கதைப்பதில் பிரயோசனம் இல்லை. அதனால் இந்த விடயத்திற்கு முடிவு கொடுப்பதைப் பற்றி யோசனை செய்யுங்கள். காணாமல் போனோர் காணாமல் போனோர் என்று தெரிவித்து காலத்தை நீடிக்கவேண்டாம்.

தற்போது சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும் விடுவியுங்கள். அரசியல் தீர்வு, காணி தொடர்பான பிரச்சினை, அனைத்து மாவட்டங்களிலும் காணிகள் இராணுவத்தினர், வனவளத்திணைக்களம், தொல்லியல் திணைக்களம் , மகாவலி திட்டத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் மாசி மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் முழுக் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று இரா. சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget