Ads (728x90)

ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்துக்கமைய தற்போதுள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் கட்டுப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தான் கட்டுப்பட்டுள்ளதாகவும், இல்லையெனில் பாராளுமன்றத்திற்கு ஊடாக 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இரத்து செய்வதா, இல்லையா என்பதை கட்சித் தலைவர்கள் தீர்மானிக்கும் வரை அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினராலும் தனிப்பட்ட பிரேரணையை முன்வைக்க முடியும் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லையெனில் அதனை நடைமுறைப்படுத்த நேரிடும் என்றும் தெரிவித்தார்.

வணக்கத்திற்குரிய அத்துரலிய ரத்தன தேரர், பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ, மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான விஜயதாச ராஜபஷ, பவித்ரா வன்னியாரச்சி, டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ விதாரண, குமார வெல்கம, ராஜித சேனாரத்ன, வஜிர அபேவர்தன, துமிந்த திசாநாயக்க, மஹிந்தானந்த அளுத்கமகே, எம்.எ சுமந்திரன், ரவூப் ஹக்கீம், சி.வி விக்னேஸ்வரன், சுரேன் ராகவன்,  சரத் வீரசேகர,  சிவநேசத்துறை சந்திரகாந்தன், சாகர காரியவசம், டிரான் அலஸ், கெவிந்து குமாரதுங்க, ஏ.எல்.எம் அதாவுல்ல, ரிஷாட் பதியூதீன், இம்ரான் மஹருப் உள்ளிட்ட பாராளுமன்ற கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget