பங்களாதேஷில் சுதந்திரப் போரில் பங்கெடுத்த வீரர்களின் வம்சாவளிகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் வழங்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் போராட்டமானது கைவிடப்பட்டது.
இருப்பினும் போராட்டத்தில் பங்கேற்றவர்களை தீவிரவாதிகள் என பிரதமர் ஷேக் ஹசீனா கூறினார். இதை அடுத்து பங்களாதேஷ் பிரதமர் ஹசீனா பதவி விலக வலியுறுத்தி மீண்டும் போராட்டம் வெடித்தது.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக வெடித்த இந்த புரட்சியில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் பங்களாதேஷ் முழுவதும் அசாதாரண பதற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பங்களாதேஷ் ராணுவ அதிகாரிகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அந்நாட்டின் ராணுவ தளபதி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். மேலும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ராணுவம் அறிவுறுத்தியது. ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய 45 நிமிடம் கெடு விதித்தது ராணுவம்.
இதனால் வேறுவழியே இல்லாமல் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமது பதவியை ராஜினாமா செய்த கையோடு வெளிநாடு ஒன்றுக்கு ஷேக் ஹசீனா தப்பிச் சென்றதாகவும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment