Ads (728x90)

இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கத் தீர்மானித்தமையால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படுகின்றது என்ற குற்றச்சாட்டை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று நாடாளுமன்றில் முன்வைத்தார். 

நீண்டகாலமாக நடத்தப்படாது உள்ள மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துவதற்கான சட்டச் சிக்கலைத் தீர்க்கும் வகையிலான தனி நபர் பிரேரணை ஒன்று எம்.ஏ.சுமந்திரனால் நீண்ட காலத்துக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 

இதற்கான சட்டத் தடைகள் நீக்கப்பட்டு இரண்டாம் வாசிப்பும் வாக்கெடுப்போ, விவாதமோ இன்றி நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் இன்று அதனை நாடாளுமன்றில் மூன்றாம் வாசிப்புக்காக எடுத்துக் கொண்டு நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டிருந்தது. எனினும் இன்று அது நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. 

இந்தநிலையில் நாடாளுமன்றில் உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், இந்த பிரேரணையை இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி முன்னதாக தம்முடன் இணங்கி இருந்த போதும், இலங்கைத் தமிழரசுக் கட்சி, சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தீர்மானித்தை அறிவித்ததை அடுத்து, ஜனாதிபதி பழிவாங்கும் வகையில் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தினார்.

நாளையும் நாடாளுமன்ற அமர்வு இருக்கின்ற நிலையில், தமது பிரேரணையை நாளைய நிகழ்ச்சி நிரலிலேனும் உள்ளடக்காவிட்டால், ரணில் தமிழர்களுக்கு எதிரான மிகப்பெரிய இனவாதியாக கருதப்படுவார் என்றும் சுமந்திரன் எச்சரித்தார்.

இதனை அடுத்து சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, எதிர்க்கட்சிகளின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல ஆகியோர் இது தொடர்பில் தமது கருத்துக்களை தெரிவித்தனர். 

எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோர் இப்பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

ரணில் விக்ரமசிங்க இந்த தனி நபர் பிரேரணையை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றித் தருவதாக தமக்கு உறுதியளித்திருந்தாகவும், ஆனால் அவர் தற்போது மிகப்பெரிய இனவாதியாக செயற்பட்டிருப்பதாகவும் எம்.ஏ.சுமந்திரன் மீண்டும் குற்றத்தை வலியுறுத்தினார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget