Ads (728x90)

இலங்கைக்கான ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதி உடனான சந்திப்பின்போது எரிசக்தி உற்பத்தி மற்றும் பரிமாற்றம், எரிபொருள் மற்றும் LNG விநியோகம், வழிபாட்டுத்தலங்களுக்கான சூரியக்கல மின்மயமாக்கல், இணைப்புகள், டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு, சுகாதாரம், மற்றும் பால்துறை அபிவிருத்தி குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் உரையாடியுள்ளார். இவ்வாறான துறைகள் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பங்களிப்பு வழங்கும் அதேவேளை வருமானத்துக்கான புதிய மார்க்கங்களையும் உருவாக்குமென அவர் சுட்டிக்காட்டியிருந்தார். 

செழிப்புமிக்க ஓர் இலங்கைக்கான தனது நோக்கினை நனவாக்குவதிலும், மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்வதிலும் இந்தியாவின் பொருளாதார ஆதரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என இலங்கை ஜனாதிபதி இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தார். 

அத்துடன் புதுப்பிக்கத்தக்க சக்தியினை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆற்றல்கள் குறித்து தெரிவித்த அவர், இலங்கையில் உற்பத்திச் செலவினை குறைப்பதற்கும், மேலதிக வளங்களை உருவாக்குவதற்கும் இது ஆதரவாக அமையுமெனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்திய சுற்றுலாப்பயணிகளின் பங்களிப்பு தொடர்பாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டதுடன் இத்துறையானது மேலும் வளர்வதற்கான சாத்தியங்களை கொண்டிருப்பதனையும் ஏற்றுக்கொண்டிருந்தார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்பில் கூறியிருந்த வெளியுறவுத்துறை அமைச்சர், ஆரம்பம் முதலே இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சிக்காக இந்தியா ஆதரவளித்து வந்ததாக நினைவூட்டியிருந்தார். 

இந்தியா முதலாவதாக நிதி உத்தரவாதத்தினை வழங்கியிருந்ததுடன் அதன் காரணமாகவே சர்வதேச நாணய நிதியம் நீடிக்கப்பட்ட நிதி வசதி குறித்த இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள வழிகோலப்பட்டது. நாட்டிற்கான சர்வதேச முறிகளின் உரித்தாளர்களுடனான உடன்படிக்கைகள் தொடர்பாக உத்தியோக பூர்வ கடன் வழங்குனர்கள் சபையில் இந்தியாவின் ஆதரவை வெளியுறவுத் துறை அமைச்சர் உறுதிப்படுத்தினார். இலங்கையுடனான தனது இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் நிறைவேற்றப்படுவதனை துரிதப்படுத்துவதற்கும் இந்தியா விரும்புகின்றது. இவ்விடயத்தில் ஜனாதிபதியும் தனது பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.

பாதுகாப்பு துறைகளில் இந்தியா மற்றும் இலங்கையின் நலன்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ளமையை இச்சந்திப்புகள் வெளிக்காட்டியிருந்தன. இரு நாடுகளினதும் ஒத்துழைப்பு பரஸ்பர நலன்களை அடிப்படையாகக் கொண்டதுடன் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கும் பங்களிப்பினை வழங்குகின்றது. நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு ஆகியவற்றினை ஊக்குவிப்பதற்காக தொடர்ச்சியான பேச்சுக்கள் அவசியமானதெனவும் இவ்விஜயத்தின்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

அதேவேளை இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இலங்கையின் ஆட்புலத்தினை பயன்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாதென ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் கவலையினை வெளியிட்டிருந்தார். இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைவில் விடுதலைசெய்யப்படவேண்டுமெனவும், அவர்கள் மீதான கடுமையான அபராதம் குறித்தும் மறுபரிசீலனை செய்யப்படவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியிருந்தார். 

வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்த மனிதாபிமான அடிப்படையிலான அணுகுமுறையானது, இந்த விவகாரத்தை தீர்த்துவைப்பதற்கான ஒரு நிலையான அடித்தளத்தினை உருவாக்கும். மீன்பிடித்துறை மற்றும் மீனவர் சங்கங்கள் குறித்த கூட்டுப் பணிக் குழு கூட்டம் உரிய காலத்தில் நடத்தப்படும். மேலும், 50 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டமையை வெளியுறவுத்துறை அமைச்சர் பாராட்டியிருந்தார்.

இனப்பிரச்சினை சார்ந்த விவகாரங்கள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் இலங்கையின் ஒற்றுமை, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பேணுகின்ற அதேவேளை தமிழ் மக்கள் உள்ளிட்ட சகல சமூகங்களினதும் சமத்துவம், நீதி, கௌரவம், சமாதானம் ஆகியவற்றுக்கான அபிலாஷைகளுக்கான இந்தியாவின் ஆதரவினை வெளியுறவுத் துறை அமைச்சர் மீள வலியுறுத்தியிருந்தார். 

இந்த இலக்கை எட்டுவதற்கு இலங்கையின் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாகவும் வினைத்திறன் மிக்கவகையிலும் அமுல்படுத்துதல் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை முற்கூட்டியே நடத்துதல் ஆகியவை வழிசமைக்கும்.

பரஸ்பரம் பொருத்தமான ஒரு திகதியில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி சார்பாக வெளியுறவுத் துறை அமைச்சரால் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பதவிக்காலம் ஆரம்பிக்கும் தறுவாயில் இலங்கைக்கு வருகைதர கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சி தெரிவித்த அவர், ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதியிடம் கையளித்த இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இந்திய – இலங்கை உறவுகளை பல்வேறு துறைகளூடாக பலப்படுத்திக் கொள்வது குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்தார்.

இலங்கையின் சுற்றுலாத்துறை, முதலீடுகள், மின்சக்தி மற்றும் வலுசக்தி, பால் சார்ந்த உற்பத்தித் துறை என்பவை தொடர்பில் இந்தியா கொண்டிருக்கும் அக்கறையை வலியுறுத்திய அவர், இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்குமெனவும் தெரிவித்தார்.

அதற்கமைய இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்காக இந்தியாவின் பாரிய சந்தை வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் இலங்கை எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியின் போது இந்திய வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்தியாவுடனான தொடர்புகளை தொடர்ந்தும் பேணுவதில் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget