Ads (728x90)

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

அரசியலமைப்பிற்கு முரணான வகையில் தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இளம் ஊடகவியலாளர்களின் சங்கத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு இன்று நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியுள்ளமையால் அவரது விடுபாட்டுரிமை நிறைவடைந்துள்ளதாக, குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரர் தரப்பின் சார்பில் முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மன்றில் தெரிவித்திருந்தார்.

அதற்கமைய ரணில் விக்ரமசிங்கவின் பெயரை மனுவில் பிரதிவாதியாகக் குறிப்பிடுவதற்கான இயலுமை காணப்படுவதாக விடயங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.

இந்த விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம் ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு அனுமதி வழங்கியது. இந்த மனு ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


Post a Comment

Recent News

Recent Posts Widget