இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேயபால, பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல உள்ளிட்ட அதிகாரிகளை நேற்று கொழும்பில் அமைந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்த தயாராக இருப்பதாகத் தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங், இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற வேண்டும் என்பது அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகும் எனவும் குறிப்பிட்டார்.
அதற்காக தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பை நல்கும் எனவும் உறுதியளித்தார்.
மேலும் அரசியல் தலையீடுகள் இன்றி நாட்டில் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்காக புதிய அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகளை பாராட்டுவதாகத் தெரிவித்த தூதுவர் ஜூலி சாங், போதைப்பொருள் மற்றும் உலகபாதாளாக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கத்தயார் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் இலங்கையில் இடம்பெறும் சைபர் குற்றங்களை தடுப்பதற்கான தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment