Ads (728x90)

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரையை ஒட்டிய கடற்பிராந்தியங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்தப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், மேற்படி கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மீன்பிடி மற்றும் கடற் சமூகம் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மல்வத்து ஓயா படுகையின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு காரணமாக, தந்திரிமலையிலிருந்து கீழ் பகுதிகளில் நீர் மட்டம் வெள்ள மட்டத்தை அண்மித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலை காரணமாக வெங்கலச்செட்டிகுளம், மடு, முசலி மற்றும் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 15 ஆம் திகதி முதல் பெய்து வரும் கனமழை காரணமாக அநுராதபுரம், கிளிநொச்சி, கேகாலை மற்றும் காலி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளையில் வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக நுவரெலியா - உடப்புசல்லாவை பிரதான வீதியில் கந்தபளை புதிய வீதி பகுதியில் வெள்ள நீர் வீதியில் ஊடுருவி கடந்து செல்வதனால் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget