Ads (728x90)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் எந்த அடிப்படையில் அந்த பதவியில் இருந்து விலகினாரோ, அந்த விடயத்திற்கான வெற்றியோடு மீளவும் கலைப்பீடாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மீளவும் கலைப்பீடாதிபதியாக பேராசிரியர் ரகுராம் நியமிக்கப்படும் வரை யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் சாத்வீக ரீதியான போராட்டத்தை முன்னெடுக்கும் என கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்தார். யாழ் பல்கலையில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வகுப்புத் தடை விதிக்கப்பட்டிருந்த மாணவர்கள் சிலரின் வகுப்புத்தடையை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மூதவை நீக்கியுள்ள நிலையில், இந்தத் தீர்மானத்துக்கு அதிருப்தி தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கலைப்பீடப் பீடாதிபதி ரகுராம், பீடாதிபதி பதவியில் இருந்து விலகும் கடிதத்தைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் கையளித்துள்ளார்.

கலைப்பீட மாணவர்கள் சிலருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டிருந்ததை அடுத்து, மாணவர்கள் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்படுத்தப்படுகின்றனர் என்று தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்திருந்தனர்.

அதையடுத்து நேற்று பல்கலைககழக மூதவை கூடி இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்தது. மாணவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடையை நீக்குவதற்கு மூதவை தீர்மானித்தது.

இந்தநிலையில் வகுப்புத்தடை ஏன் அந்த மாணவர்களுக்கு விதிக்கப்பட்டது என்ற உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும், வகுப்புத்தடை விடயத்தில் இருந்த உண்மையைத் திரிவுபடுத்தி மாணவர்களைத் தவறாக வழிநடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடாதிபதி ரகுராம், மூதவையின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்து, பீடாதிபதி பதவியில் இருந்து விலகும் கடிதத்தை யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத் துணைவேந்தரிடம் கையளித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அவரது பதவி விலகலை துணைவேந்தர் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரியவருகின்றது.


Post a Comment

Recent News

Recent Posts Widget