ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சபையில் உரையாற்றிய போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஊழல் எதிர்ப்பு விசாரணைக் குழுவின் தலைவராக செயற்பட்டார் என குறிப்பிட்டார். அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. அவ்வாறு எந்த குழுவிலும் அவர் தலைவராக செயற்படவில்லை. நான் ஊழல் ஒழிப்பு குழுவில் பணிப்பாளராக செயற்பட்டுள்ளேன்.
தற்போதைய அரசாங்கம் இலஞ்சம், ஊழல், மோசடிகள் மற்றும் நிதி முறைகேடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. அதற்கான நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்னும் ஒரு மாத காலம் பொறுமையாக இருக்க முடியுமென்றால் அதன் பிரதிபலன்களை காண முடியும். நாம் ஒருபோதும் அதனை அரசியலாக்கவில்லை.
பொலிசாரின் செயற்பாடுகளை நாம் அரசியலிலிருந்து விடுவித்துள்ளோம் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு முழுமையான பொறுப்பை நாம் வழங்கியுள்ளோம்.
அனைத்து விசாரணைகளும் சுயாதீனமாக நடைபெற்று வருகின்றன. அதன் பிரதி பலன்களை ஒரு மாத காலத்தில் நாட்டுக்கு பெற்றுக் கொடுக்க முடியும். எவர் செய்தாலும் ஊழல், மோசடி, நிதி முறைகேடுகளுக்கு எதிராக எமது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்பதை நாம் இந்த சபையில் உறுதியளிக்கின்றோம்.
தேசிய மக்கள் முன்னணி அரசாங்கம் நாட்டு மக்களுடனேயே உடன்படிக்கை செய்துள்ளது. மக்கள் வழங்கிய ஆணை, நாட்டின் இறைமை தொடர்பில் சிந்தித்தே நாம் செயற்படுகின்றோம் என்பதால் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.
Post a Comment