மக்களுடைய காணி மக்களுக்கே வழங்கப்படும். மக்களின் பொருளாதாரம் வலுப்படுத்தப்பட வேண்டும். இனவாதத்தின் ஊடாக நாட்டினால் முன்னோக்கி செல்ல முடியாது. ஒற்றுமையின் மூலமே எம்மால் முன்னோக்கி செல்ல முடியும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரியில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாம் இந்த மக்களுக்கு தொழில் வாய்புகளை ஏற்படுத்தி தருகிறோம். அரச திணைக்களங்களில் வெற்றிடங்களை நிரப்ப உள்ளோம்.2,000 பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு எதிர்பார்க்கிறோம். இதில் இணைந்து கொள்ளுமாறு தமிழ் பேசும் இளைஞர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம்.
யாழ்ப்பாணத்தில் வாழும் மக்களுக்கு பாரியளவில் காணிப்பிரச்சினை உள்ளது. மக்களுடைய காணி மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
பாதுகாப்புக்கும், அபிவிருத்திக்கும் காணிகளை கையகப்படுத்தும் அதிகாரம் அரசாங்கத்துக்கு உள்ளது. எனினும் பொய்யாக காணிகளை வைத்திருக்க முடியாது. இந்த பிரச்சினைக்கு நிச்சயம் நாம் தீர்வை பெற்றுத் தருவோம்.
எமது மீனவர்கள் நீண்டகாலமாக கடலுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இந்த பிரச்சினையை நிவர்த்திக்க வேண்டும். இந்திய அரசாங்கத்துடன் பல தடவைகள் பேச்சு நடத்தினோம். பாதுகாப்பை பலப்படுத்துமாறு நாம் கடற்படைக்கு கட்டளையிட்டுள்ளோம்.
வட மாகாணத்தில் தென்னைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ள 40 ஆயிரம் ஏக்கர் இருப்பதாக நாம் கண்டறிந்தோம். அதற்காக வரவு - செலவு திட்டத்தில் நிதி ஒதுக்க உள்ளோம். தென்னங்கன்று வழங்குவதற்கும், நிலத்தை பன்படுத்துவதற்கான பசளைக்காக நிதியையும் நாம் வழங்குவோம்.இந்த பகுதி மக்கள் விவசாயத்துக்கு பாரியளவில் பங்களிப்பு செய்யக்கூடியவர்கள். ஆனால் உரிய விலை இல்லை. உரிய திட்டமும் இல்லை. ஆனால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம்.
வட மாகாணம் சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்குகிறது. 2025 ஆம் ஆண்டு இலங்கைக்கு அதிக சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் ஆண்டாக பதிவாகும். சுற்றுலா பயணிகள் வட மாகாணத்துக்கு வருகை தர வேண்டும்.
அதற்கான திட்டத்தை நாம் தயாரிப்போம். மக்களின் பொருளாதாரம் வலுப்படுத்தப்பட வேண்டும். அதுவே எமது பிரதான இலக்காகும். வட மாகாணத்தில் உள்ள கிராமப்புற விதிகளை புனரமைப்பதற்கான நிதியை ஒதுக்குவோம்.புதிய திட்டங்களை அமைப்பதற்கும் நாம் தயாராக உள்ளோம்.
இனி மக்களுக்கு இனவாதம் தேவையில்லை. எந்தவொரு இனவாதத்துக்கும் இலங்கையில் இதன் பின்னர் சந்தர்ப்பம் இல்லை. அதனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.இந்த நாட்டில் அரசியல் பொருளாதார சமூக கலாசார ரீதியாக பல மாற்றங்களை கொண்டு வருவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். மக்களுடன் பிணைப்பைக் கொண்ட அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம்.
மக்களின் சொத்துக்களை வீண் விரயம் செய்யாத அரசியல் கலாசாரத்தை தோற்றுவிப்போம். இனவாதத்தின் ஊடாக நாட்டினால் முன்னோக்கி செல்ல முடியாது. ஒற்றுமையின் மூலமே நாட்டினால் முன்னோக்கி செல்ல முடியும் என தெரிவித்துள்ளார்.
Post a Comment