அரலகங்வில மகாவலி கலையரங்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட, மக்களால் பாதுகாக்கப்படும் அரசாங்கம். நாட்டில் மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் கடந்த தேர்தலில் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தனர். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எமது அரசுக்கு உள்ளது. அதற்காக அனைத்து துறைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தரவுகளின் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
இந்த நாட்டின் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்க அரசு சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு கணிசமான பங்களிப்பை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்னைய அரசுகளின் கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளில் ஆசிரியர்களுக்கான சரியான திட்டம் இருக்கவில்லை. ஆசிரியர்களின் மனப்பான்மையை வளர்ப்பதிலும், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களின் தொழில் திறனை மேம்படுத்துவதிலும், நவீன கல்வி அறிவை அவர்களுக்கு வழங்குவதில் எமது அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இதுவரை காலமும் அரசியல் செல்வாக்கு காரணமாகவே ஆசிரியர்கள், அதிபர்கள், நியமனங்கள், இடமாற்றங்கள் இடம்பெற்று வந்தன. அந்த நிலை மீண்டும் ஏற்படாது. இன்று அரச அதிகாரிகள் அரசியல் செல்வாக்கு இன்றி மகிழ்ச்சியுடன் கடமையாற்றி வருகின்றனர்.
ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் என ஏராளமான வெற்றிடங்கள் உள்ளன. சில இடமாற்றங்கள் முறையாக நடைபெற்றிருக்கவில்லை. இவற்றுக்கு தீர்வு காணப்பட்டு எதிர்காலத்தில் அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர்கள் பாடசலைகளுக்கு வழங்கப்படுவர்.
நான் பொலன்னறுவை மாவட்டத்திற்கு இந்த பிரதேசத்தின் கல்வி நிலைமையை அறிந்து கொள்வதற்காக வந்தேன். சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் இல்லை. உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஆனால், பொலன்னறுவை நகருக்குச் செல்லும் போது, பல வசதிபடைத்த பாரிய கட்டிடங்கள் உள்ளன. பொலன்னறுவையில் கட்டிடங்கள் கட்டுவதற்கு சுமார் ஆறாயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் பாடசாலை மாணவர்களுக்கு முறையான கழிப்பறை வசதிகள் கூட செய்து கொடுக்கப்படவில்லை.
இந்நிலை மாற வேண்டும். 2026 ஆம் ஆண்டில் நாம் மேற்கொள்ளவிருக்கும் கல்விச் சீர்திருத்தங்களின் ஊடாக, இந்நாட்டின் சகல பிள்ளைகளும் எதிர்காலத்தில் நம்பிக்கை வைக்கக்கூடிய திறன்களுடனும், பலத்துடனும் சமூகத்தில் பிரவேசிக்கும் கல்வி முறையை நாட்டில் உருவாக்குவோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
Post a Comment