Ads (728x90)

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.  

ஆனால் தற்போதுள்ள நிலைமையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி குறுகிய அரசியல் இலாபங்களை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் தரப்பினரை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எமது அரசாங்கம் முன்னெடுக்கும். அனைத்து சம்பவங்கள் தொடர்பிலும் உடனடியாக செயற்பட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் தொடர்பில் தராதரம் பாராமல் உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எனவே எவரும் அச்சப்பட வேண்டிய தேவை கிடையாது. எதிர்க்கட்சிகளுக்கு பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பதற்காக ஒரு சில விடயங்களை தூக்கி பிடித்துக்கொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சியில் உள்ள பலர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அவர்கள் இவ்வாறான விடயங்களை கூறி எம்மை சோர்வையடைச் செய்ய பார்க்கின்றனர்.

நாம் நாட்டு மக்களுக்கு பொய் கூறவில்லை. நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை மக்கள் நன்கறிவர். தேசிய பாதுகாப்பு தொடர்பில் எவ்வித சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. தேசிய பாதுகாப்பு தொடர்பில் போலியான விடயங்களை கூறி கடந்த காலங்களில் அரங்கேற்றப்பட்ட விடயங்கள் தொடர்பில் நாம் நன்கறிவோம்.

நாட்டின் தேசிய பாதுகாப்பை முதன்மைப்படுத்தி அரசியல் இலாபத்தை பெற்றுக்கொள்ளவும், ஆட்சியை உறுதிப்படுத்தவும் மேற்கொண்ட சதித்திட்டங்கள் தொடர்பில் மக்கள் இன்னும் மறக்கவில்லை.

தற்போது உள்ள நிலைமையை சாதகமாக பயன்படுத்தி குறுகிய அரசியல் இலாபங்களை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் தரப்பினரை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்தவித சிக்கல்களும் கிடையாது. இந்த விடயம் தொடர்பில் எமது முப்படை உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்


Post a Comment

Recent News

Recent Posts Widget