டக்ளஸ் தேவானந்தா அனைத்து அரசாங்கத்திலும் அமைச்சராக இருந்தார். நாங்கள் எவரையும் பாரபட்சம் பார்க்கமாட்டோம். அனைத்து விடயங்களையும் விசாரிப்போம் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரையொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து எமது பிரச்சனைக்கு தீர்வு காண்பதே உண்மையான அரசியல். உங்களுக்குத் தெரியும் இலங்கையில் சட்டமும், ஒழுங்கும் அதிகாரம் படைத்த சிலருக்கு விதிவிலக்காக இருந்தன.
ஆனால் இன்று அந்த நிலை இல்லை. அனைத்தையும் மாற்றியுள்ளோம். உங்களின் வாக்குகளால் அனைத்து விடயங்களும் மாற்றப்பட்டுள்ளன. லஞ்சத்திலும், ஊழலிலும் ஈடுபட்ட பெரும் பணமுதலைகளைப் பிடித்து, அவர்களைத் தண்டிக்கும் வேலைத்திட்டங்கள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முன்னொரு காலத்தில் அமைச்சர்களைக் கண்டு பொலிஸார் ஓடியொழிந்தார்கள். இன்று பொலிஸாருக்குப் பயந்து அமைச்சர்கள் ஓடியொளிகின்றனர்.
இங்கும் மன்னாரில் இருந்து புத்தளத்துக்குச் சொப்பின் பையுடன் வந்தவர்கள் இருக்கின்றனர். இப்போது அவர்களது சொத்துக்கள் மூலம் பத்து கப்பல்களை வாங்க முடியும்.
நாங்கள் யாரையும் பாரபட்சம் பாக்கமாட்டோம். பொதுமக்களின் பணத்தை ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். பெரிய முதலைகள் கொழும்பிலே தான் இருக்கிறார்கள்.
ராஜபக்ச மிகப்பெரிய முதலை. நாமல், யோஷித ஆகியோருக்கு எதிராகப் பொதுமக்களின் பணத்தை சூறையாடியதற்காக வழக்குகள் பதிவுசெய்துள்ளோம்.
எனவே உங்கள் வாக்குகள் மூலம் நாட்டின் சட்டமும் ஒழுங்கும் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது என்று பெருமைகொள்ளுங்கள். நாட்டின் பாதாளக் குழுக்களை உருவாக்கியது ராஜபக்சக்களும், விக்கிரமசிங்கக்களும், பிரேமதாஸக்களுமே.
முன்பு சோதனைச் சாவடிகளில் பெண்கள் பொட்டு வைத்துச்சென்றால் இருமுறை சோதனை செய்வார்கள். பொட்டு இல்லாவிடில் ஒருதரம் செய்வார்கள், முஸ்லிம் மக்கள் என்றால் மூன்றுதரம் சோதனை செய்வார்கள், அதை மாற்றும் செயற்பாட்டை நாம் முன்னெடுத்துள்ளோம்.
நாங்கள் இந்த அரசை பொறுப்பெடுத்து 5 மாதங்களே ஆகின்றது. ஓட்டோவை வேகமாகத் திருப்பலாம். பேருந்தையும், கப்பலையும் வேகமாகத் திருப்புவது கடினமே. பிழையான வழியில் சென்ற தேசத்தையே திருப்ப நாம் முற்பட்டுள்ளோம்.
உங்களுக்கும், எங்களுக்கும் கிடைத்தது சொர்க்கமான பூமி அல்ல. வங்குரோத்தான ஒரு நாடு. ரணில் இந்த நாட்டை ஆண்டபோது டொலரின் பெறுமதி காலை ஒரு விலையிலும், மாலை ஒரு விலையிலும் இருந்தது. இன்று அதில் ஒரு உறுதித்தன்மை காணப்படுகின்றது. உங்கள் பொருளாதார பிரச்சனைகள் தீர்வதற்குக் கொஞ்சகாலம் எடுக்கும். ஆனால் நிச்சயம் தீர்த்துவைப்போம்.
தெற்கின் கம்மன்பில போன்றோர் வடக்கிலும் உள்ளனர். அரசியல் அநாதைகளாக அவர்கள் மாறியுள்ளனர். அவர்கள் இனவாதத்தை விதைக்கிறார்கள்.
ஈஸ்ரர் தாக்குதலில் சந்தேகத்தின் பெயரில்தான் பிள்ளையானைக் கைதுசெய்திருக்கிறோம். அவரைக் கைதுசெய்தவுடன் அவருடன் தொலைபேசி அழைப்பில் கதைக்கவேண்டும் என முதலாவதாக முற்பட்டவர் யார் என்று தெரியுமா? பிள்ளையானின் மனைவி அல்ல. ரணில் விக்கிரமசிங்க.
அவர்கள் இருவரும் நண்பர்களா? ஒருபோதும் இல்லை. கம்மன்பில பிள்ளையானின் சட்டத்தரணியாக ஏன் மாறுகிறார்? அவர் ராயபக்சவின் கோளையாள்.
உயிர்த்தஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை கண்டறிய விசாரணை நடத்தப்படும்போது ராஜபக்ச, ரணில், சஜித் அனைவரும் குழப்பம் அடைந்துள்ளனர். நாட்டை வளப்படுத்த முற்படும்போது கள்வர்கள் குழப்பமடைந்துள்ளனர் என்றார்.
Post a Comment