Ads (728x90)

இந்த நாட்டில் பொதுவான பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில் வடக்கு மக்களுக்கு பிரத்தியேகமான பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. 

யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் யுத்தத்தால் தோற்றம் பெற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. யுத்தத்தால் தோற்றம் பெற்ற பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வினை பெற்றுக்கொடுப்போம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யுத்தம் மற்றும் பாதுகாப்பு காரணிகளை குறிப்பிட்டுக்கொண்டு மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. விடுவிக்க கூடிய அனைத்து காணிகளையும் விடுவிப்பேன். அவரவர் காணிகள் அவரவருக்கு வழங்கப்படும். விசேட கருத்திட்டத்தின் ஊடாக வடக்கு மாகாணத்தில் காணப்படும் வீட்டு பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுப்போம். இடைநிறுத்தத்தப்பட்ட அபிவிருத்தி பணிகளை மீள ஆரம்பிப்போம். முல்லைத்தீவு வட்டுவாக்கல் பாலம் நிர்மாணிப்பு பணிகளை அடுத்த மாதம் ஆரம்பிப்போம் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தில் வடக்கு, கிழக்கு, தெற்கு என அனைத்துபகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு சமமான உரிமையை வழங்குவதோடு இலங்கையர்கள் என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளதாகவும்  ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

முதற்தடவையாக கடந்த பொதுத்தேர்தலில் வடக்கு தமிழ் மக்களும், தென்பகுதி சிங்கள மக்களும், கிழக்கு முஸ்லிம் மக்களும் தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்தார்கள் எனவும் மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது பாரிய நம்பிக்கை வைத்தமையினாலேயே தேர்தலில் எமக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பிரிந்திருந்த அனைவரும் தற்போது ஒன்றாகியுள்ளதாகவும், இனிமேல் நாம் பிரியவேண்டிய தேவை இல்லை எனவும், எமக்குள் பிளவு ஏற்படவும் தேவையில்லை எனவும், இனவாத அரசியல் எமக்கு இனியும் வேண்டாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேசமயம் நாம் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கான அரசியலை முன்னெடுத்துள்ளதாகவும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது எனவும்,தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனைத்து மதங்களுக்கும், அனைத்து கலாசாரங்களுக்கும். மதிப்பளிப்பதோடு அனைவரும் இணைந்து வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget