நேருக்கு நேர் போர்களத்தில் மோதிய தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கூட என் குடும்பத்தை பழிவாங்கவில்லை. ஆனால் ராஜபக்ஷர்கள் அதனை செய்தனர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.
களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்தார்.
கடன் பெற்று அதனை மீள செலுத்தாமல் மோசடி செய்தமை தொடர்பில் பேசும் போது, ராஜபக்ஷர்களை நினைவு கூராவிட்டால் அது நாம் எமது பொறுப்பினை தட்டிக்கழிப்பதற்கு சமமாகும்.
மக்களுக்கு எவ்வித பயனும் அற்ற வேலைத்திட்டங்களுக்காக பாரிய தொகையில் கடன் பெற்று, அதனை மோசடி செய்துள்ளனர். இவ்வாறான மோசடிகளின் பலனாக 2022 இல் எரிபொருள், எரிவாயு கப்பல்களுக்கு பணம் செலுத்த முடியாமல் அவை திரும்பிச் சென்றன.
அது மாத்திரமின்றி அத்தியாவசிய பொருட்களுக்காக மக்கள் வரிசைகளில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய துரதிஷ்டவசமான நிலைமையும் ஏற்பட்டது.
ஊழல், மோசடி நிறைந்த அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளால் தான் இந்த நிலைமை ஏற்பட்டது என மக்கள் நம்பினர். அது தான் உண்மை நிலைமை என்பதே எனது நம்பிக்கையுமாகும். இளம் தலைமுறையினர் இந்த யதார்த்தத்தை உணர்ந்து கொண்டுள்ளனர்.
எனவே முந்தைய கால கட்டத்திலிருந்த அரசியல்வாதிகள் தற்போது காலாவதியாகிவிட்டனர். எனவே இந்த அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.
இந்த அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைத்தால் முந்தைய ஊழல், மோசடி அரசியல்வாதிகள் அதனால் பலன் பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.
Post a Comment