Ads (728x90)

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தனது ஆட்களுடன் தங்க கடத்தலில் ஈடுபட்டு வரும் நாகார்ஜுனா, தனது கூட்டத்தில் இருக்கும் கருப்பு ஆடுகளை வேட்டையாடி வருகிறார். அவருக்கு வலது கையாக சோபின் சாஹிர் இருக்கிறார். 

பொலீசுக்கு தகவல் சொல்பவர்களை கொன்று அந்த உடல்களை அப்புறப்படுத்துவதில் அந்த கும்பலுக்கு சிக்கல் வருகிறது. அந்த கூட்டத்தில் கூலியோடு கூலியாக ஒரு பொலீஸ் உளவாளி இருப்பது தெரிய வருகிறது.

இதற்கிடையில் தனது நண்பர் சத்யராஜின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வரும் ரஜினிகாந்த், அவரது சாவில் மர்மம் இருப்பதை கண்டுபிடிக்கிறார். சத்யராஜின் மகள் ஸ்ருதிஹாசன் துணையுடன் சத்யராஜை கொன்றவர்களை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்கிறார். 

அப்போது நாகார்ஜுனாவின் கூடாரத்துக்கே சென்று அவரை சந்திக்கும் சூழ்நிலை ரஜினிகாந்துக்கு ஏற்படுகிறது. அப்போது, துறைமுகத்தில் கொல்லப்படுபவர்களின் உடல்களை தான் கண்டுபிடித்த நவீன எந்திரத்தின் மூலமாக சத்யராஜ் சாம்பலாக்கி அப்புறப்படுத்தி வந்தது தெரிய வருகிறது. 

சத்யராஜை கொலை செய்தது ஏன்? தனது உயிர் நண்பன் மரணத்துக்கு ரஜினிகாந்த் பழிதீர்த்தாரா? ரஜினிகாந்த் - நாகார்ஜுனா இடையேயான மோதல் என்ன ஆனது? இருவருக்கும் உள்ள பின்னணி என்ன? ரஜினிகாந்தின் பின்புலம் என்ன? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது கூலி.

நாகார்ஜுனாவின் வில்லத்தனமான நடிப்பு மிரட்டல். எதிராளிகளை அவர் கொலை செய்யும் போக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அமீர்கான், உபேந்திராவின் வருகையும் கவனிக்க வைக்கிறது. ஒரு பாட்டுக்கு மட்டுமே வந்தாலும் பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி குத்தாட்டம் மெருகூட்டுகிறது. சோபின் சாஹிரின் யூகிக்க முடியாத நடிப்புக்கு பாராட்டலநடிப்புக்கு பாராட்டலாம். ஸ்ருதிஹாசனின் நடிப்பும் பாராட்டை பெறுகிறது.

கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு படத்துக்கு உயிரோட்டமாக இருக்கிறது. அனிருத்தின் அதிரச்செய்யும் இசை ஆட்டம் போட வைக்கிறது. வழக்கமான பழிவாங்கல் படலம் என்றாலும் புதுமையான திரைக்கதையில் பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்த காட்சிகளைக் கொண்டு ரசிக்கக்கூடிய படமாக இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.



 

Post a Comment

Recent News

Recent Posts Widget