குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் சந்தேகநபர் ரணில் விக்ரமசிங்க சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜா பிரேமரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இந்த உத்தரவை பிறப்பித்த நீதவான், விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களை ஆராய்ந்ததில், இந்த வழக்கின் அடிப்படையான பிரச்சினைக்குரிய பயணம் ஒரு தனிப்பட்ட பயணம் என்று தெரிகிறது என்று கூறினார்.
சந்தேகநபர் இந்த பயணத்திற்கு அரசாங்க நிதியைப் பயன்படுத்தியதை சந்தேகநபரின் சட்டத்தரணிகள் மறுக்கவில்லை என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்படும்போது அசாதாரண சூழ்நிலைகள் வெளிப்படும்போது மட்டுமே பிணை வழங்க முடியும் என்றும், ஆனால் சந்தேகநபரின் பிணை விண்ணப்பம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள் அசாதாரண சூழ்நிலைகளை வெளிப்படுத்தாததால், அவருக்கு பிணை வழங்க முடியாது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி சந்தேக நபரின் பிணை மனுவை நிராகரித்த நீதவான் அவரை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். சந்தேக நபருக்கு சிறையில் தேவையான பாதுகாப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்றும் நீதவான் மேலும் உத்தரவிட்டார்.
Post a Comment