Ads (728x90)

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் பொருத்தமில்லை என்றால் மக்களை அணி திரட்டி தெளிவுபடுத்துங்கள் என எதிர்க்கட்சியினரை பார்த்து கேட்டுக் கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, சூழ்ச்சிகளை செய்ய வேண்டாம் அதற்கு இடமில்லை என தெரிவித்துள்ளார்.

நமது பொருளாதாரம் பேரழிவை சந்திக்கும் என்ற கொடூரமான கனவை காண்கிறீர்கள். அந்த அழிவுகரமான கனவு நனவாகாது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதும், நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை திருத்துவதும் அரசாங்கத்தின் நோக்கமெனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.

எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இரத்து செய்யப்பட வேண்டும், நிகழ்நிலை காப்பு சட்டமூலம் திருத்தப்பட வேண்டும், இந்த நாட்டில் மறைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் தீர்க்கப்படாத கொலைகள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போருக்குப் பின்னர் தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொழும்பில் குண்டுகள் வீசப்படும் என்று எதிர்பார்த்தனர். அப்போது எங்கள் இராணுவ தளபதி பாகிஸ்தானில் இருந்தார். ஆனால் இங்கு எதிர்க்கட்சியினர் கொழும்பில் குண்டுகள் வீசப்படும் என்று எதிர்பார்த்தனர்.  

பின்னர் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே ஒரு சர்வதேசப் போர் வெடித்த பிறகு இப்போது நாடு சரிந்துவிடும் என்று எதிர்பார்த்தனர். அது நடக்கவில்லை. அடுத்த மிகப்பெரிய எதிர்பார்ப்பு அமெரிக்க வரிக்கொள்கையால் நமது பொருளாதாரம் சரிந்துவிடும் என்பதுதான். 

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுவைகள் குறித்து தெரிவிக்கையில் இவர்களுக்கு எவ்விதமான விசேட சலுகைகளும் வழங்கப்படாது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதி பகுதியளவில் குறைக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய கொடுப்பனவும் இரத்துச் செய்யப்படும்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள். ஆனால் இந்த யோசனையை எதிர்க்கட்சியினர் தான் முதலில் கொண்டு வந்தார்கள். இந்த தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கும் என்று இவர்கள் எதிர்பார்க்கவில்லை என்றார்.

எமது பாதுகாப்பு மற்றும் புலனாய்வு பிரிவின் மீது எமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. ஆகவே தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற அரசியல் பிரசாரத்தை மேற்கொள்ளாதீர்கள். இந்த நாடு குற்றங்களின் தேசமாகவே கடந்த காலங்களில் காணப்பட்டது. பாதாள குழுக்களுக்கு அரச அனுசரணையும் வழங்கப்பட்டிருந்தது என்றார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget