தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது இரண்டாவது வரவு செலவுத் திட்டமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ள ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைய 2026 ஆம் ஆண்டிற்கான மொத்த அரசாங்க செலவினம் 4,434 பில்லியன் ரூபா ஆகும்.
அடுத்த ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் ஊடாக நிதி அமைச்சகத்திற்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ரூபா 634 பில்லியன் ஆகும்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சகத்திற்கு ரூபா 618 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் பொது நிர்வாக அமைச்சிற்காக ரூபா 596 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகத்திற்கு ரூபா 554 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சிற்கு ரூபா 455 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் கல்வி அமைச்சிற்கு ரூபா 301 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செலவினத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூபா 11 பில்லியன் ஆகும். 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதியின் செலவினத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூபா 2.7 பில்லியனுடன் ஒப்பிடும்போது இது சுமார் ரூபா 8 பில்லியன் அதிகமாகும். 2026 ஆம் ஆண்டில், முக்கியமான வளர்ச்சித் திட்டங்களுக்காக ரூபா 8.29 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளமை இவ்வாறு செலவின அளவு அதிகரிக்க காரணமாகும்.
ஓய்வூதியங்களுக்காக ரூபா 488 பில்லியன் ஒதுக்ககப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான செலவுகளை ஈடுகட்ட பெறக்கூடிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் பெறுதலின் அதிகபட்ச வரம்பு ரூபா 3,800 பில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை மீறக்கூடாது.
இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், முதலாம் வாசிப்புக்காக செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு எனப்படும் நிதியமைச்சர் என்ற முறையில் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கிய ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டம் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 8 முதல் நவம்பர் 14 வரை 6 நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்று மாலை 6:00 மணிக்கு நடைபெறும்.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 17 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வரவு செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment