Ads (728x90)

இலங்கை மின்சார சபையின் 23,000  ஊழியர்கள் மறுசீரமைப்புக்கு அமைய நான்கு அரச நிறுவனங்களில் சேவைக்கு அமர்த்தப்படுவார்கள். இந்நிறுவனங்களுக்கு செல்ல விருப்பமில்லாத ஊழியர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் சேவையில் இருந்து விலகலாம். அவ்வாறு விலகுபவர்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நட்டஈடு சூத்திரத்துக்கு அமைய குறைந்தபட்சம் 50 இலட்சம் ரூபா வழங்கப்படும் என வலுசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி தெரிவித்துள்ளார்.

மின்சார சபை தொழிற்சங்கத்தின் ஒருதரப்பினர் குறுகிய நோக்கங்களை முன்னிலைப்படுத்தி போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பல கோரிக்கைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளோம். இனியும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு காலத்தை வீணடிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையின் மின்கட்டமைப்பு மறுசீரமைப்பில் இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பு பிரதான அம்சமாக காணப்படுகிறது. மின்சாரசபையின் கட்டமைப்பு முழுமையாக மறுசீரமைக்கப்படும். சபையின் பணிகள் மற்றும் பொறுப்புக்கள் நான்கு நிறுவன கட்டமைப்பின் கீழ் கொண்டு வரப்படும்.

மின்சார சபையின் பொறுப்புக்கள் மற்றும் சொத்துக்கள் நிறுவன கட்டமைப்பின் அடிப்படையில் வேறுபடுத்தப்படும். மின்சார சபையின் ஊழியர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து தற்போது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன.

சட்டத்தின் பிரகாரம் மின்சார சபையை மறுசீரமைக்க வேண்டும். மின்சார சட்டத்தை திருத்தம் செய்யாமல் இருந்திருந்தால் கடந்த அரசாங்கம் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கமைய 12,000 ஊழியர்களை சேவையில் இருந்து நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். தொழிலாளர்களின் உரிமைகளை முடக்கவோ அல்லது அவர்களை சேவையில் இருந்து நீக்கவோ நாம் கருதவில்லை என்றார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget