Ads (728x90)

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற 151ஆவது சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் கூட்டத்தொடரில் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தலைமையில் இலங்கை பாராளுமன்றக் குழு கலந்துகொண்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களான ஓஷானி உமங்கா, சாந்தா பத்மகுமார, மொஹமட் பைசல், ஹேஷா விதானகே மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். 

இந்தக் கூட்டத்தொடர் 'மனிதாபிமான நெறிமுறைகளை நிலைநிறுத்துதல் மற்றும் நெருக்கடி காலங்களில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல்' என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது.

தொடர்ந்து வரும் உலகளாவிய மனிதாபிமான சவால்களின் பின்னணியில், சர்வதேச மனிதாபிமான சட்டத்தைப் பாதுகாப்பதில், பலதரப்பு உறுதிப்பாடுகளை வலுப்படுத்துவதில், மற்றும் மோதல் மற்றும் நெருக்கடி காலங்களில் பயனுள்ள மனிதாபிமானப் பதில்களை உறுதி செய்வதில் பாராளுமன்றங்களின் பங்கு குறித்து விவாதிக்க உலகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான சட்டமியற்றுபவர்களை இந்தக் கூட்டத்தொடர் ஒன்றிணைத்தது.

இந்த மாநாட்டில் இலங்கை சார்பில் உரையாற்றிய பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, மனிதாபிமானப் பதிலளிப்பு மற்றும் நெருக்கடி மேலாண்மையில் இலங்கையின் அனுபவத்தை எடுத்துரைத்தார். 

2004 சுனாமியை ஒரு வரையறுக்கும் தருணமாகக் குறிப்பிட்டு, தயார்நிலை, ஒருங்கிணைப்பு மற்றும் மனிதாபிமான நெறிமுறைகளுக்கு இணங்குவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இது இலங்கையின் மீள்திறனையும், உள்ளூர் மற்றும் சர்வதேச மனிதாபிமான ஒத்துழைப்பின் இன்றியமையாத பங்கையும் அடிக்கோடிட்டுக் காட்டியது.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இலங்கை தூதுக்குழு, நேபாள தேசிய சபையின் தலைவர் சு.வ. நாராயண் பிரசாத் தஹால் தலைமையிலான நேபாள தூதுக்குழுவுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தியது. பாராளுமன்றப் பரிமாற்றம், கல்வி, சுற்றுலா மற்றும் கலாச்சார உறவுகள் போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தின. 

இரு தரப்பினரும் பாராளுமன்றங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், உயர்மட்டப் பரிமாற்றங்களை எளிதாக்குதல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துதல் குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மேற்படி கூட்டத்தொடர் நான்கு நாட்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget