Ads (728x90)

நாட்டில் ஊழல்களை ராஜபக்ஷ குடும்பமே நிர்வகிக்கிறது. ஊழல் மற்றும் மோசடிகள் வரையறைகளைத் தகர்த்து சென்றுகொண்டிருக்கின்றன. இவர்களை சிறைகளில் அடைத்தாலும் ஊழல்களை கைவிட மாட்டார்கள் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் உத்தியோகபூர்வ இல்லங்களை இன்னும் அரசாங்கத்திடம் கையளிக்கவில்லை.

மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளரான சட்டத்தரணி விஜேராம இல்லத்தில் அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தில் உள்ள பொருட்கள் இருப்பதாகவும், அவை அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டதன் பின்னரே தமது தனிப்பட்ட பொருட்களை அங்கிருந்து அகற்ற முடியும் என்றும் கூறுகின்றார். 

உத்தியோகபூர்வ இல்லத்தை மீள் புனரமைப்பதற்காக 50 கோடி பொது நிதியை செலவிட்ட மஹிந்த ராஜபக்ஷ தனது சொந்த பணத்தில் ஒரு ஏணியையாவது வாங்கியிருப்பார் என்று நம்புகின்றீர்களா?

தனது கால்டன் இல்லத்தில் வெறும் 40,000 பெறுமதியான கதிரைகளை வைத்திருக்கும் மஹிந்த ராஜபக்ஷ விஜேராம இல்லத்திலும், ஜனாதிபதி மாளிகையிலும் அதனை விடவும் பெறுமதியான தளபாடங்களையே வைத்திருந்தார். அவை அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.  

நான் ஜனாதிபதியாகியிருந்தால் முதலில் அதற்காக அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்திருப்பேன். 24 மணித்தியாலங்களுக்குள் கைது செய்ய முடியும். அவர்கள் மீது பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலும், விஜேராம மாவத்தையிலுள்ள அந்த பொருட்களை எவ்வாறு கொள்ளையிடுவது என்பதே மஹிந்தவின் சிந்தனையாகவுள்ளது.

எனவே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊழலை ஒழிப்பதாக பெருமிதம் கொண்டாலும், மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ஷ குடும்பத்துக்கு எதிராக முறையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இவர்கள் நாட்டுக்கு சேவையாற்றியதாக ஏற்றுக்கொள்ள முடியாது.

இவர்கள் ராஜபக்ஷ குடும்பத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் தினத்தில் தான் இந்த அரசாங்கம் மக்களுக்காக செயற்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்வோம். எமக்கு அதிகாரம் இல்லாவிட்டாலும் உண்மையைக் கூற நாம் அச்சப்படுவதில்லை என்றார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget