Ads (728x90)

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளின் தலைவர்கள் பங்குபற்றிய பேரணி தொடர்பில் தேசிய மக்கள் சக்தி பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் "அலிபாபாவும் 400 திருடர்களும்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் பிரதியமைச்சர் இந்த விமர்சனத்தை முன்வைத்தார்.

இந்த நாடு வங்குரோத்து நிலை அடைந்ததற்கு மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பமே பதில் சொல்ல வேண்டும். மேடையில் இருந்தவர்கள் அனைவரும் ஏற்கெனவே சிறை சென்று வந்துள்ளவர்கள். இன்று "எல்லா திருடர்களும் ஒரே மேடையில்" தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக அணிதிரண்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டினார்.

அத்துடன் ஹரின் பெர்னாண்டோ ஒரு காலத்தில் மஹிந்தவை 'பகல் திருடன்' என்று வர்ணித்த அதே வாயால், இன்று நாமல் ராஜபக்ஷவை 'இளவரசர்' என்று சொல்வதைச் சுட்டிக்காட்டிய பிரதியமைச்சர், நாமல் ராஜபக்ஷவை 'திருட்டு இளவரசர்' என்று மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

மொட்டு கட்சி என்பது "இனவாதத்தின் சின்னம்" என்றும், இந்தத் திருட்டுக் கும்பல் மீண்டும் இனவாதத்தை உருவாக்கி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்றப் பகல் கனவு காண்கிறது.

ஆனால் இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களும் புத்திஜீவிகளாகச் சிந்திக்கின்ற காரணத்தினால், அந்த கட்சியினால் இந்த முயற்சியில் ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்றும் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget