ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உடனடி நிவாரணங்கள், உலர் உணவு விநியோகம், மருத்துவ வசதிகள் மற்றும் இடம் பெயர்ந்தோருக்கான தங்குமிட ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவாக மீட்டெடுக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
மன்னாரில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மீனவ சமூகம் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், தற்போது சுமார் 12,000 மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இதன்போது தெரியவந்தது.வெள்ளத்தால் பாதிக்கப்படாவிட்டாலும், சீரற்ற வானிலை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலையில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கான உலர் உணவுப் பொதிகளை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
யோத வாவி நீரேந்துப் பகுதியில் சட்டவிரோதமாக காணிகள் கையகப்படுத்தப்படுவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், குளங்களின் எல்லைகளில் கற்களை இடுவதற்குத் தடையாக இருப்பவர்கள் மீது சட்டத்தை அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
மாவட்டத்தில் சேதமடைந்த பாதைகள் மற்றும் பாலங்களை புனரமைப்பது குறித்து இங்கு விசேட கலந்துரையாடல் நடைபெற்றதுடன், அந்த நடவடிக்கைகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்து, அந்த சந்தர்ப்பத்திலேயே தீர்வுகளை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.
வெள்ள அனர்த்தம் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் நிவாரண உதவிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் மாவட்டத்தில் உள்ள கல்வி வலய மாணவர்களின் நிலை, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவித் திட்டங்கள், விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் துரித நிவாரண மற்றும் இழப்பீடு நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஜனாதிபதி அரச அதிபர் ஊடாக உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.மன்னார் மாவட்டத்தில் அனர்த்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட மற்றும் வாழ முடியாத வீடுகளில் வசிக்கும் 70 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு புதிய காணியை பெற்றுக்கொள்ள அல்லது வீடு கட்டுவதற்கு தலா 50 லட்சம் ரூபா நிதி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் உபாலி சமரசிங்க, வட மாகாண ஆளுநர் என். வேதநாயகம், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். திலகநாதன், எம். ஜெகதேஸ்வரன், டி. ரவிகரன், சத்தியலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், ரிஷாத் பதியுதீன் ஆகியோர், நிதி அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வட மாகாண பிரதம செயலாளர் டி. முருகேசன், மன்னார் மாவட்ட செயலாளர் கே. கனகேஸ்வரன் மற்றும் அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படை பிரதிநிதிகள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



Post a Comment