ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கை மிக விரைவில் மீண்டு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர், இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் திட்டத்துடன் இந்தியா முன்னெப்போதையும் விட அதிக அர்ப்பணிப்புடன் கைகோர்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட விசேட கடிதத்தையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியிடம் கையளித்தார்.
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களின் நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு முயற்சிகளுக்கும், இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும் இந்தியப் பிரதமரும், இந்திய அரசாங்கமும் அளித்த மனப்பூர்வமான ஆதரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றியுடன் பாராட்டினார்.
ஒப்பரேஷன் சாகர் பந்து திட்டத்தின் ஒரு பகுதியாக, வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்லி பாலத்தை மெய்நிகர் மூலம் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துடன் இணைந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மெய்நிகர் மூலம் திறந்து வைத்தார்.
மீட்புப் பணிகளுக்கு ஹெலிகொப்டர்கள், மருந்துகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும், சேதமடைந்த வீதிகளை மீளமைப்பதிலும், மகியங்கனை வைத்தியசாலை உள்ளிட்ட வைத்தியசாலை கட்டமைப்பை மறுசீரமைப்பதிலும் இந்திய அரசாங்கம் அளித்த விசேட ஆதரவையும் ஜனாதிபதி நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
ஒவ்வொரு கடினமான சமயத்திலும் இந்தியா, இலங்கைக்கு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவை ஜனாதிபதி ஞாபகமூட்டியதோடு பேரழிவுக்குப் பிறகு இலங்கையின் மீளமைப்பு செயற்பாட்டிற்கு வழங்கும் ஒத்துழைப்பு இந்திய-இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.இந்த கடினமான சமயத்தில் இலங்கையுடன் பலமாக இணைந்திருக்கவும், இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் பணிகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளை வழங்கவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனக்கு அறிவுறுத்தியதாகவும், அந்த முயற்சிகளை ஆராய்வதற்காக இந்தியப் பிரதமரின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு தான் விஜயம் மேற்கொண்டதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.




Post a Comment