Ads (728x90)

2026 ஆம் ஆண்டில் முதற்கட்டமாக 1,500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் பலகைகளுக்காக பெற்றோரிடம் பணம் சேகரிக்க வேண்டாம் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே பணம் சேகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துங்கள் என்று பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கிறேன். 

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலிச் செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு முன்னுரிமை வழங்கி கேள்விகளை கேட்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் தயவுடன் கேட்டுக் கொள்கிறேன் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வின் போது எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலவச கல்வி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அக்கறை கொண்டுள்ளதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் கடந்த காலங்களில் இவ்வாறான கொள்கையை கொண்டிருக்கவில்லை. தற்போது மாற்றமடைந்துள்ளதையிட்டு அவருக்கு நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பீடத்தை மூடுவதற்கும், கம்பஹா விக்கிரமராராச்சி பல்கலைக்கழகத்தை மூடுவதற்கும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

முறையான வழிமுறைகள் மற்றும் வளங்கள் இல்லாமலேயே கம்பஹா விக்கிரமராராச்சி பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இதனால் அங்கு கல்வி பயிலும் மாணவர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது குறித்து ஆராய்வதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பாடத்திட்டம் அரசியல் கட்சிகள் ஊடாக தயாரிக்கப்படுவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் குறிப்பிட்டுக் கொள்கிறேன். அதற்கு சட்டத்தால் உருவாக்கப்பட்ட அரச நிறுவனம் உள்ளது. அதில் எம்மால் தலையிட முடியாது. புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் கடந்த மாதங்களில் வழங்கிய ஒத்துழைப்பை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். கல்வி மறுசீரமைப்பு பற்றி அவர் தொடர்ச்சியாக அவதானம் செலுத்துவது வரவேற்கத்தக்கது என்றார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget