Ads (728x90)

கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் தமது சொந்தத் தேவைகளுக்கும், அரசியல் இலாபங்களுக்காகவுமே வீதிகளை அபிவிருத்தி செய்தனர். ஆனால் தற்போதைய அரசாங்கமே மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து வீதிகள், பாலங்கள் மற்றும் இறங்குதுறைகளை அபிவிருத்தி செய்து வருகின்றது. 

நான் யாழ். மாவட்டச் செயலராகக் கடமையாற்றிய காலத்தில் எவையெல்லாம் சாத்தியமற்ற கனவுகளாக இருந்தனவோ, அவை இன்று இக்காலப்பகுதியில் நனவாகி வருகின்றன என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் வீதிக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்திச் செயற்படுத்தப்படும் 'மறுமலர்ச்சிக்கான பாதை' திட்டத்தின் கீழ், ஆவரங்கால் - தொண்டைமானாறு வீதி மேம்படுத்தல் மற்றும் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு அச்சுவேலி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வரி நீங்கலாக சுமார் 680 மில்லியன் ரூபா மதிப்பீட்டில், 6.03 கிலோ மீற்றர் நீளத்துக்கு இவ்வீதி முழுமையாகப் புனரமைக்கப்படவுள்ளது. துரித கதியில் முன்னெடுக்கப்படவுள்ள இவ்வீதிப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு 12.05.2027 அன்று மக்கள் பாவனைக்காக மீளக் கையளிக்கப்படவுள்ளது. 

இன்று இப்பகுதி மக்களுக்கு மிக மகிழ்ச்சிக்குரிய நாள். ஆவரங்கால் - தொண்டைமானாறு வீதியைத் திருத்த வேண்டும் எனப் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், நீண்ட காலமாக அது சாத்தியப்படாமலே இருந்தது. அந்தக் கனவு இப்போதைய அரசாங்கத்தின் காலத்தில் நடைமுறைக்கு வருகின்றது.

கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் வடக்கு மக்கள் மீது விசேட கரிசனையுடையவர். அவர் கடந்த காலத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதே, எமது மக்களின் துயரங்களை அறிந்தவர். நான் யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய அக்காலப்பகுதியில், அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினருக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாண மக்களுக்கும் நிதி ஒதுக்கியிருந்தார். 

அந்தளவு தூரம் எமது மக்கள் தொடர்பில் அக்கறை கொண்டவர். எனவே அவர் நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராக உள்ள இக்காலத்தில், எமது மாகாணத்தின் அபிவிருத்திகளைச் சிறப்பாகச் செய்ய முடியும். இவ்வாய்ப்பை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.

நிகழ்வின் ஆரம்பத்தில் சமய வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, வீதிப் புனரமைப்புக்கான பெயர்ப்பலகையை அமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோர் திரைநீக்கம் செய்து வைத்து நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget