தம்புள்ளையிலிருந்து கொழும்பு கங்காராம விகாரையை நோக்கி அவர்கள் ஆரம்பித்த சமாதான நடைப்பயணத்தின் மூன்றாம் நாள், உபய விகார மகா சங்கத்தினரதும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களினதும் பங்கேற்புடன் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக ஆரம்பமானது.
மூன்றாம் நாள் நடைப்பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் உட்பட மகா சங்கத்தினரும், பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களும் தலதா மாளிகையில் வழிபாடுகளை மேற்கொண்டு மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, தலதா மாளிகையின் பத்திரிப்புவ முன்பாக அமைக்கப்பட்ட விசேட மேடையில் மகா சங்கத்தினர் பிரித் ஓதி ஆசீர்வாதங்களை வழங்கினர்.வணக்கத்திற்குரிய பஞ்யாகர தேரர் தலைமையிலான பிக்குகளையும், உலகளாவிய ரீதியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள 'அலோகா' என்ற நாயையும் காண்பதற்காக இன்றும் வீதியின் இருமருங்கிலும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர்.
பிக்குகள் வருகை தரும் பாதையில் பௌத்த அடியார்கள் வெள்ளைத் துணிகளை விரித்தும், வாழை இலைகளைப் பரப்பியும், நீர் தெளித்தும் வரவேற்றனர்.
தலதா மாளிகையில் ஆரம்பமான மூன்றாம் நாள் சமாதான நடைப்பயணம், மாவனெல்ல பெலிகம்மன வித்யாவர்த்தன பிரிவேனா பொத்குல் விகாரையில் நிறைவடையவுள்ளதுடன், ஏப்ரல் 28 ஆம் திகதி இச்சமாதான நடைப்பயணத்தின் நிறைவு நிகழ்வு நடைபெறவுள்ளது.


Post a Comment