Ads (728x90)

புனிதமான பௌத்த பிக்குச் சீருடையைத் தவறாகப் பயன்படுத்தி, உலகிற்கு முன்னால் அவமதிப்பை ஏற்படுத்தி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பிக்குகளின் சட்டவிரோதச் செயலைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக பௌத்த உயர்பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்வத்து மகா விகாரை தரப்பின் மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர், அஸ்கிரி மகா விகாரையின் மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர், அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் கரகொட உயன்கொட மைத்ரி மூர்த்தி தேரர் மற்றும் ராமஞ்ஞ மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் மகுலாவே விமல தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பாரம்பரிய கௌரவம் மற்றும் பிக்குச் சீருடை மீதான பௌத்தர்களின் நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த சட்டவிரோதச் செயலுடன் தொடர்புடைய அனைத்து பிக்கு வேடதாரிகளுக்கும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிக்குச் சீருடையையும் சாசன அடையாளத்தையும் பயன்படுத்தி இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் பிக்குகள் குறித்து விசாரணை நடத்தி, அவர்களைச் சாசனத்திலிருந்து நீக்குவதற்கான முறையான பொறிமுறையைத் தயாரிப்பதன் அவசியம் இந்தச் சந்தர்ப்பத்தில் மீண்டும் புலனாகிறது என்றும், இதற்கான சட்ட ஏற்பாடுகளைச் செய்வதற்கு அரச இயந்திரம் விரைவாகத் தலையிட வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget