
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளது. எம்.எஸ்.விஸ்வநாதன் மூச்சுத்திணறல் காரணமாக அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இரு தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது.
நினைவுகளை இழந்தார். இதனால் அவசர பிரிவில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருக்கிறார். உயிரை காப்பாற்ற டாக்டர் குழுவினர் போராடுகிறார்கள். திரையுலகினரும், உறவினர்களும் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று உடல்நலம் விசாரித்து வருகின்றனர்.
எம்.எஸ்.விஸ்வநாதன் படஉலகின் சகாப்தமாக போற்றப்படுகிறார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 1200–க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். மறைந்த எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசனின் நிறைய படங்கள் இவரது இசையிலேயே வந்தன. மெல்லிசையால் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழக இதயங்களை கட்டி போட்டு இருக்கிறார்.
இன்றைய இளைய தலைமுறையினரை அவரது பாடல்கள் ஈர்த்து வைத்துள்ளன. சிறுவயதில் வறுமையில் வாடிய அவர் எதிர்நீச்சல் போட்டே புகழின் உச்சியை அடைந்தார். எம்.எஸ்.விசுவநாதனுக்கு 87 வயது ஆகிறது.
Post a Comment