Ads (728x90)



ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி,
மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசி அன்பர்களே!

குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ல் சிம்மத்தில் 5-7-2015 முதல் 1-8-2016 வரை உலாவருகின்றார். பொதுவாக குருபகவான் 4-ல் வரும்போது விழிப்புடன் செயல்பட வேண்டும். நஷ்டங்களைத் தவிர்க்கலாம். எதையும் அலட்சியமாக செய்யவைப்பார். அப்படி அலட்சியமாக செய்ய ஆரம்பிக்கும்போது சோம்பலும் மறதியும் வந்து ஒட்டிக்கொள்ளும். ஒன்றை எப்போதும் நீங்கள் நினைவுகொள்ள வேண்டும். தெய்வம் நமக்கு சாதகமாக இல்லை என்றாலும், "மெய்வருத்தக் கூலி தரும்' என்று முன்னோர்கள் அருளிச்சென்ற சொல்லை மனதில் நிறுத்தி, உடல் உழைப்பைச் செய்ய வேண்டும். காரியங்களை திட்டமிட்டு நடத்தவேண்டும். எல்லா விஷயத்திலும் முன்புபோல ஆர்வமுடன் செயல்படத் தவறினால், உங்களை நம்பியுள்ள குடும்பம் கஷ்டத்தை அடையும் என்பதை நினைக்கவேண்டும்.

குருபகவான் 4-ல் வந்துவிட்டாலும், உங்கள் சுயஜாதகத்தில் குருபகவான் சிறப்பாக இருப்பாரேயானால் சிரமங்கள் எதுவும் வராது. குடும்பத்திலுள்ள உறுப்பினர்களிடம் மிகவும் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள்.  உங்களது கௌரவத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சிலசமயம் சம்பவங்கள் நடைபெற்றாலும், நீங்கள் பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது. ஒருசிலரது குடும்பத்தில் நடக்கவேண்டிய சுபகாரிய நிகழ்ச்சிகள் தடை, தாமதத்துடன் நடக்கும். இப்போது நீங்கள் பழைய காரியங்களை மட்டும் செயல்படுத்தவேண்டும். புதிய காரியங்களை செயல்படுத்தக்கூடாது. குரு 4-ல் வந்தவுடன் நம்மை பாடாய்ப்படுத்தும் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. என்றும் நல்லவர்களாக  வாழ்கிறவர்கள் குருபகவானால் பாதுகாக்கப்படுவார்கள். தீய வழிகளில் ஈடுபடுகிறவர்கள் மட்டுமே குரு 4-ல் வரும்போது பாதகங்களை அனுபவிப்பார்கள்.

உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை அதிக உபத்திரவம் எதுவுமிருக்காது. தாய்- தந்தையர் வழியில் மருத்துவச் செலவுகள் வரும். கொடுக்கல்- வாங்கல் சீராகவே இருக்கும். கணவன்- மனைவி உறவில் விரிசல்வராது. பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். விவாகரத்துவரை சென்றவர்களும் மீண்டும் சேர்ந்துவாழ்வார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் குழந்தை பாக்கியம் கிட்டும்.

05-07-2015 முதல் 23-08-2015 வரை குரு, கேது சாரத்தில் நேர்கதியில் உலா


இந்த காலகட்டத்தில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் திடமான முடிவுடன் வாழ்வீர்கள். கவலைகள் மறையும். கஷ்டங்கள் குறையும். நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். இப்போது உங்களை மற்றவர்கள் மதித்து நடப்பார்கள். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள். கிரகநிலை சாதகமாக இருந்தாலும் குரலில் மாற்றம் செய்து பேசவேண்டும். எல்லாரையும் விரட்டக்கூடாது. கண்டபடி நீங்கள் விரட்டினால் உங்கள் மனைவிகூட உங்களை மதிக்க மாட்டார் என்பதை உணரவேண்டும். கடிதத் தொடர்புகள் நல்ல தகவலைக் கொண்டுவரும். ஒருசிலர் இன்டர்வியூவில் கலந்துகொண்டு, பதவி நியமன உத்தரவையும் பெறுவார்கள்.

24-08-2015 முதல் 27-10-2015 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் நேர்கதியில் உலா


இந்த காலகட்டத்தில் கறுப்பாகவுள்ள உங்கள் நண்பர்களால் சிரமங்களை அடைவீர்கள். எனவே அவர்களின் உறவைத் துண்டித்துக் கொள்வது நல்லது. இப்போது மனம் தெளிவாக இருக்காது. புதிதாக பிரச்சினைகள் உருவாகும். பணத்தேவை அதிகமாகும். மாற்று வழிகளைக் கையாள்வீர்கள். அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் நல்ல ஆதாயம் பெறுவீர்கள். யாருக்கும் வாக்குறுதி கொடுக்காதீர்கள். கடன் வாங்காமலும், கடன் கொடுக்காமலும் இருப்பது நல்லது. தொழில் துறையில் உள்ளவர்கள் புதிய யுக்திகளைக் கையாண்டு தங்கள் தொழிலை மேன்மையாக்குவார்கள். வாக்குறுதி கொடுத்துவிட்டோம் என்பதற்காக நீங்கள் கடன்பட்டால், அந்தக் கடனை நீங்கள்தான் கட்ட வேண்டியது வரும். சகுனிபோன்ற நண்பர்கள் உங்களைவிட்டு அவர்களாகவே பிரிந்துசெல்வார்கள்.

28-10-2015 முதல் 15-01-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலா


இப்போது நீங்கள் உங்களைப்பற்றி நினைத்துப் பார்ப்பீர்கள். ஏட்டிக்குப் போட்டியாக நடந்துவந்த நீங்கள் நல்லவராக மாறுவீர்கள். தீய நண்பர்களைவிட்டு விலகி வந்துவிடுவீர்கள். உடல்நலன் சீராக இருக்கும். மனதில் இறுக்கமான சூழ்நிலை இருந்துவரும். நீங்கள் பொருளாதாரத் தேவையைப் பூர்த்திசெய்ய கடுமையாக உழைப்பீர்கள். பொருளாதார வசதி எவ்வளவுதான் இருந்தாலும், சில நேரங்களில் பணநெருக்கடி ஏற்படும். உறவினர்கள் வகையில் திடீர் பயணம் வந்துசேரும். உங்களை ஏமாற்றிச் சாப்பிட்டவர்கள் இருக்குமிடம் தெரியாமல் போய்விடுவார்கள். அரசு ஊழியர்கள் தங்கள் செயலில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வேலை செய்கிறவர்கள், அதிகாரிகளிடம் பாராட்டு பெறவேண்டும் என்பதைவிட, சரியாகச் செய்யவேண்டுமென்ற நினைவோடு உங்கள் பணிகளைச் செய்ய வேண்டும். சொத்துப் பிரச்சினைகள் தலைதூக்கும். ஆனால் சுமுகமான முடிவுக்கு வரும். பெற்றோர்களால் உதவி உண்டு. தற்காலிகப் பணிநீக்கம் போன்ற தண்டனையை அடைந்தவர்கள் இப்போது மீண்டும் பணி வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

16-01-2016 முதல் 07-02-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் வக்ரம்


இந்த காலகட்டத்தில் உங்கள் செயலில் தடுமாற்றங்களைக் காண்பீர்கள். யாரையும் மதிக்காத சூழ்நிலை சனியால் ஏற்படும். தடித்த வார்த்தைகள் காரணமாக காவல்துறைவரை சிலர் செல்வீர்கள். ஒருசிலர் வழக்கையும் சந்திக்கவேண்டிய சூழ்நிலை வரும். பெற்றோர்களை மதிக்காமல் நடப்பீர்கள். சகோதரிகளிடம் கோபமாக நடக்கும் சூழ்நிலை வரும். காவல்துறை நடவடிக்கைக்கு சிலர் ஆளாவீர்கள். எனவே கவனமுடனும் நிதானத்துடனும் நடந்துகொள்ள வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம் என்று இருப்பவர்களுக்கு தொல்லைகள் எதுவும் வராது. கூட்டுத் தொழில் செய்கிறவர்கள் ஒருவரையொருவர் புரிந்து நடந்துகொள்ள வேண்டும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை பழைய நிலையிலேயே மேற்கொள்ள வேண்டும். அபிவிருத்திக்காக நீங்கள் எதிர்பார்த்த அரசாங்க கடன் வருவதில் தாமதமாகும். வெளிநாடு செல்ல போட்ட திட்டத்தையும் தள்ளிப் போட வேண்டும். நண்பர்களின் செயலை நம்பி நீங்கள் எந்த காரியத்தில் இறங்கினாலும் நஷ்டமே வரும். எனவே எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

08-02-2016 முதல் 14-06-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் வக்ரம்


கடந்த காலங்களில் கணவன்- மனைவி உறவில் இருந்துவந்த வேதனை தீரும். தொடர்ந்துவந்த இடையூறுகள் நீங்கும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேக ஆரோக்கியம் மிகவும் தெளிவாக இருக்கும். கணக்காக வாழ நினைத்த உங்கள் எண்ணப்படி வாழ்வீர்கள். எதிலும் தைரியமாக வேலை செய்வீர்கள். வெளித் தொடர்புகள் லாபகரமானதாக அமையும். கூட்டுத் தொழில் புரிந்தவர்கள் கூடுதல் லாபத்தைக் காண்பார்கள். கூட்டாளிகள் மனசாட்சிப்படி செயல்படுவார்கள். புதிதாக தொழில் துவங்கும் திட்டம் நிறைவேறும். வீட்டில் நிம்மதி பெருகும். கணவன்- மனைவி ஒற்றுமைக்கு குறைவில்லை. பிரிந்துவாழ்ந்த தம்பதியர் இப்போது ஒன்றுசேர்வார்கள். குழந்தை பாக்கியம் தடையின்றிக் கிட்டும். ஒருசிலருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கக்கூடும். அந்தக் குழந்தைகள் நல்ல நிலையில் வாழ்வார்கள். பெற்றோர்கள் மனதில் பட்ட விஷயங்களைச் சொன்னால் போதும்; செய்துமுடிப்பீர்கள்.  

15-06-2016 முதல் 09-07-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் நேர்கதியில் உலா


இப்போது அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் உங்களுக்கு நல்ல உதவிகள் கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். ஏற்கெனவே வெளிநாட்டில் வேலைசெய்கிறவர்கள் கூடுதல் சம்பளம் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் பெற்றோர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படமாட்டார்கள். உடன்பிறந்தவர்களுடன் சற்று அனுசரித்துச் செல்லவேண்டும். அரசு ஊழியர்கள், தொழிலாளிகள் வேலைப்பளுவை சந்திப்பார்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு ஆதரவாக இருக்கமாட்டார்கள். எனவே நிதானித்துச் செல்லவேண்டும். வேலை தேடும் இளைஞர்களுக்கு அதற்கான வாய்ப்பு சற்று தள்ளிப்போகலாம். கையூட்டுபெறும் அரசு ஊழியர்கள் தங்கள் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த குருப்பெயர்ச்சியில் பிறப்பு ஜாதகப்படி சிலர் காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாவார்கள். குடும்பத்தினர் சிரமத்தை அடைவார்கள். எனவே எதிலும் யோசித்துச் செயல்படுங்கள். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த நினைத்த திட்டத்தை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கவேண்டும்.

10-07-2016 முதல் 01-08-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலா


இந்த காலகட்டத்தில் நீங்கள், அனைவரையும் மிகவும் அனுசரித்துச் செல்லவேண்டும். பூர்வீக சொத்துக்கள் விற்பனையில் தாமதம் ஏற்படும். பெற்றோர்களால் மருத்துவச் செலவுகள் கூடும். அவர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருக்கமாட்டார்கள். உடன் பிறந்தவர்களும் உங்களுக்கு எதிராகச் செயல்படுவார்கள். எனவே நீங்கள் இப்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வேண்டிய அளவுக்கு வருவாய் வராது. சிக்கனமாக இருந்தால் நன்மைகளை அடையலாம். அரசு ஊழியர்கள் தங்கள் பணியில் நெருக்கடிகளை சந்திக்க நேரும். செய்யாத தவறுக்காக சிலர் தண்டனையை அடைவார்கள். சக பணியாளர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஒருசிலர் இப்போது வெளிநாடு செல் வார்கள். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டு. ஒருசிலர் குடும்பத்துடன் குலதெய்வக் கோவிலுக்குச் சென்றுவருவார்கள். பிரச்சினைகள் அதிகமிருந்தாலும் கணவன்- மனைவி உறவுகளில் விரிசல் வராது.

அரசு ஊழியர்கள்


குரு 4-ல் உள்ள இந்த நேரத்தில் இடமாறுதல் வந்தால் மறுக்காமல் சென்றுவிடுங்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக இருக்கமாட்டார்கள். உடன்பணிபுரிபவர்கள் உங்கள்மீது இல்லாத பழியைச் சொல்லிவருவதுதான் காரணம். எனவே பணியில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்புரிய வேண்டும். வேலைப்பளு கூடும். கையூட்டு பெறும் காரணத்தால் ஒருசிலர் வேலையிழக்கும் நிலை வரும். எனவே உங்கள் குடும்பத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். புதிதாக தொழில் துவங்க உரிய நேரம் இதுவல்ல. புதிதாக கடன் வாங்கி எதையும் செய்யக்கூடாது.

வியாபாரிகள்


வியாபாரம் செய்கின்றவர்களுக்கு இது உகந்த வருடம். உங்கள் தொழிலை விரிவுபடுத்தும் திட்டம் நிறைவேறும். குறிப்பாக எலக்ட்ரானிக் சார்ந்த தொழில் செய்கிறவர்கள் கூடுதல் லாபத்தை அடைவார்கள். தவணை முறையில் சேலை, கட்டில், பீரோ விற்பனை செய்கின்றவர்கள் கிராமப் பகுதியில் விற்பனையை செய்யவேண்டும். லாபங்கள் கூடுதலாகும்.

தொழிலாளர்கள், தொழிலதிபர்கள்


தொழிலாளிகளைப் பொறுத்தமட்டில், தொழிற்சங்கம் (யூனியன்) தற்போது பலன்தராது. அனைத்து வகையிலும் இடையூறு வரலாம். எனவே நீங்கள் தொழிலதிபர்களுடன் ஒத்துப்போக வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகள் அதிகமாக இருந்தாலும், நியாயமான தேவைகளை மட்டும் பூர்த்திசெய்வீர்கள். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த போட்ட திட்டத்தை தள்ளிவைக்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து ஆர்டர்கள் வருவதில் தாமதம் ஏற்படும். எனவே குறைந்த லாபம் கிடைத்தாலும் போதுமென்று உள்ளூர் ஆர்டர்களை சேகரித்தால், தொழிற்சாலை லே-ஆப் வராமல் நடக்கும். தொழிலாளர்களுக்கு கொடுக்கவேண்டிய சலுகைகள் அனைத்தையும் கொடுப்பீர்கள். எனவே அவர்களும் உறுதுணையாக இருப்பார்கள்.

பெண்கள்


பெண்களைப் பொறுத்தவரையில் இப்போது பொறுமையுடன் செயல்படவேண்டும். அக்கம்பக்கம் உள்ளவர்களின் இடையூறுகளை சமாளிக்க வேண்டும். இதற்கு முன்னர் கணவருக்கு ஏற்பட்ட நோய் தீரும். உடல்நிலை சீராகி மீண்டும் வேலைக்குச் செல்வார்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும். உங்கள் உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும். கணவன்- மனைவி உறவு எப்போதும்போல் இருக்கும்; சண்டை வராது. பிள்ளைகளின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாகும். நல்ல வரன்களாக வந்துசேரும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தாய்மை நிலையை அடைவார்கள். முந்தைய வருடங்களில் அடைந்த சிரமம் குறையும்.

மாணவர்கள்


குரு 4-ல் உள்ள இந்த நேரத்தில் மாணவர்கள் வெளியூர் சென்று படிக்கலாம். உள்ளூரில் தீய நண்பர்கள் உங்கள் படிப்பைப் பாழாக்கு வார்கள். மேலும் உங்களுக்கு இதுவரை தெரியாத தீய பழக்கங்களை பழக்கிவிடுவார்கள். எவ்வளவுதான் பெற்றோர்கள் கண்டிப்போடு நடந்தாலும், நீங்கள் அவர்களுக்கு டிமிக்கி கொடுப்பீர்கள். ஒருசிலர் மட்டும் நன்றாகப் படிப்பார்கள். மற்றவர்கள் தேர்ச்சிபெற்றாலே போது மென்று இருப்பார்கள். 10-ஆவது, +2 படிக்கும் மாணவர்களை பெற்றோர்கள் நல்லபடியாக கவனிக்க வேண்டும்.

கலைஞர்கள்


ஓரளவு வாய்ப்புகள் உண்டு. படத் தயாரிப்பாளர்கள் உங்களுடன் அனுசரித்துச் செல்வார்கள். உங்கள் திறமையைக் கண்டு மற்றவர்கள் வியந்துபோவார்கள். நீங்கள் நடித்த படம் வெற்றிப்படமாக ஓடும். கையில் பணப்புழக்கம் சரளமாக உண்டு. காதல் திருமணம் செய்துகொண்ட சில நடிகர்கள் மனைவியால் நிறைய பொருள் இழப்புகளை சந்திப்பார்கள். அவர்களால் வழக்கையும் சந்திக்கவேண்டி வரும். நிம்மதி குறைந்துபோகும். இப்போது உங்களுக்கு தேவையானது நிதானம். அதற்காக தியானம் செய்து பழகுங்கள். அனைத்தும் நன்மையாகும்.

விவசாயிகள்


இந்த ஆண்டு அதிகமழை பெய்யுமென்பதால் குறுகியகால வித்துக்கள் பலன் தரும். புகையிலை பயிரிடுபவர்கள் கூடுதலான பலன்களைப் பெறுவார்கள். அரசாங்கத்தில் கடன் பெறாமலிருப்பது நல்லது. நவீன கருவிகளைப் பயன்படுத்துபவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். பழுதுகள் வரலாம். இயந்திரங்களை நன்கு இயக்கத்தெரிந்தவர்களிடம் கொடுக்கவேண்டும். அரைகுறை பழக்கம் உள்ளவர்களிடம் கொடுக்கக் கூடாது.

அரசியல் பிரமுகர்கள்


குரு 4-ல் உள்ள இந்த நேரத்தில் அரசியல் பிரமுகர்கள் இருக்கின்ற பதவியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அரசியல் நண்பர்களிடம் எதையும் மனம் திறந்து சொல்லிவிடாதீர்கள். தலைமையை அவர்களே விமர்சித்துவிட்டு, நீங்கள் விமர்சனம் செய்ததாகக் கூறிவிடுவார்கள். பொதுமக்கள் மத்தியில் உங்கள் அணுகுமுறையை அன்புடன் கொண்டு செல்ல வேண்டும். மௌனமாக காரியங்களைச்  செய்யவேண்டும்

கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு:


நீங்கள் எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். பொருளாதாரத் தட்டுப்பாடுகள் வராது. ஒருசிலர் வெளிநாடு போக போட்ட திட்டம் நிறைவேறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. நல்ல வரன் அமையும். தாய், தந்தையர் வழியில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். சகோதரர்கள் வழியில் இருந்த பகை நீங்கும். 70 சதவிகித நன்மையுண்டு.

ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு:


நீங்கள் செய்யும் வேலைகள் அனைத்தும் தடையின்றி நடக்கும். உங்கள் கடன்கள் முழுவதையும் அடைத்துவிடுவீர்கள். பொருளாதார வரவு அதிகமுண்டு. சுயதொழில் புரிகின்றவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச்செல்வார்கள். 75 சதவிகித நன்மைகள் உண்டு.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு:


உங்களது செயல்பாடுகளை நீங்கள் மாற்றியமைத்தால் நல்ல பலன்கள் கிட்டும். தீய நண்பர்கள் உங்களை வழிநடத்தப் பார்ப்பார்கள். ஆனால் உங்கள் குலதெய்வம் அவர்களை விரட்டிவிடும். செய்யும் தொழிலில் நல்ல லாபம் உண்டு. ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். ஒருசிலர் வெளிநாடு போக போட்ட திட்டம் நிறைவேறும். 65 சதவிகித நன்மையுண்டு.

பரிகாரம்


முருகப் பெருமானையும், குருபகவானையும் வணங்கி வர கூடுதல் நன்மை கிட்டும். ஆலயம் செல்ல முடியாதவர்கள் 27 கொண்டைக்கடலையை எடுத்து, அதனை மஞ்சள் துணியில் முடிந்து பர்சில் அல்லது பையில் வைத்துக்கொள்ள வேண்டும். குருபகவான் அருள் கிட்டும். 

Post a Comment

Recent News

Recent Posts Widget