மிதுன ராசி அன்பர்களே!
குரு பகவான் 05-07-2015 முதல் உங்கள் ராசிக்கு 3-ல் வருகின்றார். எனவே எதிலும் எச்சரிக்கையாக வாழவேண்டும். குரு 3-ல் வந்தபோது துரியோதனன் படை மாண்டது என்பார்கள். ஆகவே குருபகவான் 3-ல் உள்ள இந்த காலகட்டத்தில் எதிலும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உங்கள் உடன்பிறந்தவர் உங்களுக்கு எதிராக மாறலாம். உங்கள் சொத்துக்களை அபகரிக்க நினைப்பார். எனவே எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மைத்துனர்கள் குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணுவார்கள். கணவன்- மனைவி உறவில் விரிசல் வரப்பார்க்கும். எனவே மைத்துனர்களை உங்கள் வீட்டுப் பக்கம் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அவர்கள் ஆலோசனைகளும் உங்களுக்கு கெடுதலைத் தரும். உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இல்லை. அதேசமயம் குரு பகவான் பெரிய அளவில் பாதகம் செய்யமாட்டார். சங்கடங்கள் குறையும்.
குரு பகவான் 3-ல் சஞ்சரித்தாலும், உங்கள் சுயஜாதகத்தில் குருபகவான் சிறப்பாக இருப்பாரேயானால் தற்போது சிரமங்கள் வராது. குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களிடம் நீங்கள் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். குடும்பத்தில் மிகவும் சிந்தித்துச் செயல்பட வேண்டும். உங்களது கௌரவத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சில சம்பவங்கள் நடைபெற்றாலும், நீங்கள் பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது. ஒருசிலரது குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் தடை, தாமதத்துடன் நடக்கும். இப்போது நீங்கள் பழைய காரியங்களை மட்டும் செயல்படுத்த வேண்டும். புதிய காரியங்களை செயல்படுத்தக்கூடாது. என்றும் நல்லவர்களாக வாழ்கின்றவர்கள் குருபகவானால் பாதுகாக்கப்படுவார்கள். தீய வழிகளில் ஈடுபடுபவர்கள் மட்டுமே குரு 3ல் வரும்போது பாதகங்களை அனுபவிப்பார்கள்.
குடும்பத்தில் மட்டுமே தொந்தரவுகளை சந்திப்பீர்கள். தொழி லதிபர்களின் அயராத உழைப்பில் தொழில் துறை உயரும். இதுவரை தொழிலில் ஏற்பட்ட தொந்தரவுகள் நீங்கி உற்பத்தியும் பெருகும். அரசாங்கத்தில் இருந்து உங்களுக்கு வரவேண்டிய பணப் பயன்கள் வந்துசேரும். ஒருசிலர் பதவி உயர்வுடன் விரும்பிய இடத்துக்கு மாறுதலில் செல்வார்கள். இப்போது நீங்கள் உங்களைவிட அனுபவசாலிகள் சொல்லும் கருத்துகளை ஏற்றுக்கொள்வீர்கள். வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கிட்டும்.
காதல் திருமணம் செய்ய நினைத்தவர்கள் மிகவும் கஷ்டத்தை அடைவார்கள். அவர்கள் எண்ணம் ஈடேறாது. அரசுப் பணியில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். நல்ல அரசு ஊழியர்கள் பதவி உயர்வுடன் நினைத்த இடத்துக்கு மாறுதலையும் வாங்கிச்செல்வார்கள். கையூட்டு பெறுகின்றவர்கள் காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாவார்கள். 16 ஆண்டுகள் சிரமத்தை அடைவார்கள். எனவே அரசு ஊழியர்கள் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும்.
உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை அதிக உபத்திரவம் எதுவும் இருக்காது. தாய், தந்தையர் வழியில் மருத்துவச் செலவுகள் வரும். கொடுக்கல்- வாங்கல் சீராகவே இருக்கும். கணவன்- மனைவி உறவில் விரிசல் வராது. பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். விவாகரத்துவரை சென்றவர்களும் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
05-07-2015 முதல் 23-08-2015 வரை குரு, கேது சாரத்தில் நேர்கதியில் உலா
இந்த காலகட்டத்தில் நீங்கள் நல்ல பலன்களை அடைவீர்கள். சுபிட்சத்தை அடைவீர்கள். தொட்ட காரியம் துளிர்விடும். உற்றார்- உறவினர்களால் பலனுண்டு. அவர்கள் இப்போது உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். சகோதர- சகோதரிகள், வேறுபாடுகள் மறந்து உதவி கரமாக இருப்பார்கள். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். பெற்றோர் களால் மருத்துவச் செலவு கூடும். ஒருசிலர் வெளிநாடு போக போட்ட திட்டம் நிறைவேறும். மனைவிவழி உறவுகளால் நல்ல செய்திகளும் லாபங்களும் வந்துசேரும். தூரதேசத்திலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.
24-08-2015 முதல் 27-10-2015 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் நேர்கதியில் உலா
சுக்கிரன் சாரத்தில் குரு பகவான் உலாவரும் இந்த நேரத்தில் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். உங்களது அலட்சியப் போக்கால், கறுப்பாக உள்ளவர்கள் உங்கள் பொருளாதாரச் சரிவுக்கு காரண மாவார்கள். எனவே புதிய நண்பர்கள் சகவாசம் கூடாது. உடல்நிலையில் சற்று கவனம் செலுத்தவேண்டும். சுய மருத்துவம் செய்யாமல், மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துவாங்கி சாப்பிட்டால் பக்க விளைவுகள் வருவதைத் தவிர்க்கலாம். பணப் பற்றாக்குறை வராது. ஏதாவது ஒருவகையில் பணம் வந்துசேரும். தொழில் துறை லாபத்தைக் கொண்டுவரும். அரசாங்க உதவியும், அரசாங்க சலுகையும் கிடைக்கும். மத்திய அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வந்து சேரும். வேறு மாநிலங்களில் பணிக்குச் செல்வார்கள்.
28-10-2015 முதல் 15-01-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலா
இந்த காலகட்டத்தில் உங்களது குடும்பத்தில் எடுத்த காரியமனைத்திலும் ஜெயத்தைக் காணலாம். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பொன், பொருள் சேர்க்கைக்கு குறைவு வராது. குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து செயல்படுவார்கள். இதுவரை உடல் அசதியையும், அசௌகரியத்தையும் அடைந்த நீங்கள் மிகவும் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். நண்பர்களாலும் வெளிவட்டாரப் பழக்கத்தாலும் பொருளாதார உயர்வுகள் ஏற்படும். அக்கம்பக்கம் குடியிருப்பவர்கள் இப்போது உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். பூர்வீக சொத்துகள் பிரிவினை சுமுகமாக முடியும். அதனை விற்பனை செய்வதில் தாமதம் ஏற்படும். எனவே சொத்து விற்பனையைத் தள்ளிப்போடுவது நல்லது. இப்போது நீங்கள் பணிபுரியும் இடத்திலிருந்து மாறுதல் கோரக்கூடாது. தள்ளிப்போட வேண்டும். அரசாங்க நன்மைகள் வர தாமதமாகும்.
16-01-2016 முதல் 07-02-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் வக்ரம்
இந்த காலகட்டத்தில் நீங்கள் எதிர்பாராதது அனைத்தும் நடக்கும். தடையாகும் என்று நினைத்த அனைத்து காரியங்களும் வெற்றியாகும். தற்காலிகப் பணிநீக்கம் பெற்ற அரசு ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்வார்கள். தொழிலாளர் ஒற்றுமை கூடி உற்பத்தி பெருகும். தொழிலதிபர்கள் அதிக லாபம் பெறுவார்கள். அவர்களது தொழில்களில் இடையூறு எதுவும் வராது. தொழிலாளர்கள் கிடைக்கவேண்டிய சலுகைகள் அனைத்தையும் பெறுவார்கள். பெற்றோர்கள் உடல்நிலை சீராகும். மிதுன ராசி அன்பர்கள் நினைக்காததும்கூட நன்மையாக முடிந்து மகிழ்ச்சியில் திளைப்பார்கள்.
08-02-2016 முதல் 14-06-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் வக்ரம்
இந்த காலகட்டத்தில் பெரிய பாதிப்புகள் எதுவும் வராது. அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் லாபங்கள் வந்துசேரும். அயல்நாடு சென்றுள்ள அன்பர்கள் அதிகமான லாபத்தைப் பெறுவார்கள். அரசியல் பிரமுகர்கள் எடுக்கும் முயற்சி கைகூடும். ஒருசிலர் தலைமையால் தேர்வு செய்யப்படுவார்கள். மக்கள் மத்தியிலும் செல்வாக்கைப் பெறுவார்கள். உடல்நிலை சீராகும். மனதில் ஏற்பட்ட இறுக்கம் குறையும். சேமிப்பு நிலையில் உயர்வுகள் உண்டு. இப்போது உங்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள் வந்துசேரும். வழக்குகள் சாதகமாகும். இதுவரை உங்களுக்கு எல்லா வகையிலும் தொந்தரவு கொடுத்துவந்தவர்கள் விலகிச்செல்வார்கள். நீண்டகாலமாக விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும். புதிய வரன்கள் வந்துசேரும். நல்ல வரன்தானா என்று ஜாதகம் வாயிலாக ஆராய்ச்சி செய்து முயற்சிகளைச் செய்யவேண்டும்.
15-06-2016 முதல் 09-07-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் உலா
வேலை தேடும் இளைஞர்கள், தகுதிக்கேற்ப வேறு மாநிலங்களில் வேலை செய்ய வாய்ப்புகள் கூடும். ஒருசில இளைஞர்கள் மத்திய அரசில் வேலைவாய்ப்பினைப் பெறுவார்கள். அயல்நாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். நல்ல தொழில், வருமானத்தோடு வேலைவாய்ப்பினை பெறுவார்கள். பெற்றோர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் வந்துசேரும். சொந்தத்தொழில் செய்துவருகிறவர்கள் எதிர்பாராத லாபத்தைப் பெறுவார்கள். பிள்ளைகள் வழியில் இருந்துவந்த தொந்தரவுகள் மறையும். நீண்டகாலமாக திருமணம் நடைபெறாத பிள்ளைகளுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும். லட்சுமி உங்கள் வீட்டில் அமர்ந்து குறைகளைப் பூர்த்தி செய்வார். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். மாணவர்கள் உயர்கல்வி படிக்க போட்ட திட்டம் நிறைவேறும்.
10-07-2016 முதல் 1-08-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் உலா
குருபகவான் கடந்த காலங்களில் ஏற்ற இறக்கங்களைத் தந்த நிலை மாறுபடும். வங்கியில் கேட்ட கடன் வந்துசேரும். விவசாயத்தை விரிவாக்கம் செய்யும் எண்ணம் ஈடேறும். தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள். பெற்றோர்களின் உடல்நலம் சீராகும். மருத்துவச் செலவுகள் குறையும். வீட்டைவிட்டுச் சென்றுவிட்ட உங்கள் மகன் இப்போது வந்துசேருவார். இருக்கும் இடமும் தெரியும். அரசுப் பணி தேடுகின்றவர்கள் நல்ல வேலையை அடைவார்கள். இப்போது நீங்கள் எழுதியிருந்த தேர்வில் வெற்றிச் செய்தி வந்துசேரும். தொடர்ந்து அரசுப் பணியும் கிட்டும். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். தொழிலதிபர்கள், தொழிலாளர் ஒற்றுமையால் அதிக உற்பத்தி பெறுவார்கள். கூடுதல் லாபத்தையும் அடைவார்கள். புதிதாக தொழில் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். அதற்கான நிதி உதவியும் வந்துசேரும். சகோதரர்கள் ஒற்றுமை கூடும். வழக்குகள் சாதகமாகும். கூட்டுத் தொழில் புரிகிறவர்கள் மத்தியில் இருந்துவந்த கோபம் மாறும். நேசக்கரம் நீட்டுவார்கள். புதிதாக பங்குதாரர்கள் வந்து சேர்வார்கள். 15 ஆண்டுகளாக குழந்தையில்லாத தம்பதியருக்கும் குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள், பெற்றோர்கள் சொல்கேட்டு நடப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கிச்சேர்ப் பீர்கள். தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச்செல்வார்கள். ஒருசிலர் வீடு வாங்க சந்தர்ப்பம் கூடிவரும். நிலுவையாக இருந்துவந்த தொகை வந்துசேரும். ஒருசிலர் திடீர் அதிர்ஷ்ட பாக்கியங்களை அடைவார்கள். அரசியல் பிரமுகர்களில் ஒருசிலர் தலைமையால் பாராட்டப்பட்டு, அமைச்சர் பதவியையும் அடைவார்கள்.
அரசு ஊழியர்கள்
குரு 3-ல் அமர்ந்து வேலைப்பளுவைக் கூட்டுவார். வேலை செய்யும் இடங்களில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உண்டு. வரவேண்டிய இனங்கள் அனைத்தும் வந்துசேரும். நல்ல முறையில் செயல்படும் அரசு ஊழியர்கள் குரு பகவான் அருளால் கூடுதல் வருவாயைப் பெறுவார்கள். கையூட்டு பெறும் அரசு ஊழியர்கள் இந்த வருடம் முழுவதும் நிதான மாகச் செயல்பட வேண்டும். தவறு செய்வதைத் தவிர்க்கவேண்டும். ஒருசிலர் காவல்துறை தண்டனைக்கு ஆளாவார்கள்.
வியாபாரிகள்
போட்டி வியாபாரிகளின் தொல்லை குறையும். புதிதாக கிளை துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். கனிவான பேச்சால் வாடிக்கையாளர் களைக் கவரலாம். வாடிக்கையாளர்கள் உங்களை விட்டுச் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொள்முதல் சரக்குகளில் வியாபாரிகள் உபரி லாபத்தைப் பெறுவார்கள்.
தொழிலாளர்கள், தொழிலதிபர்கள்
தொழிலாளர் மற்றும் தொழிலதிபர்கள் உறவுகளில் விரிசல் வராது. முடிந்தவரை தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாமல் இருப்பது நல்லது. தொழிலதிபர்கள் தொழிலாளருக்கு சேரவேண்டிய நிலுவைத் தொகை, போனஸ் போன்றவற்றை அவர்களே முன்வந்து கொடுப்பார்கள். தொழிலதிபர்கள் புதிதாக தொழில் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த நிதியுதவி கிட்டும். எப்போதும் வம்பு வழக்கோடு உள்ள தொழிலதிபர்கள் தொழிற் சாலைகளில் பிரச்சினைகளைச் சந்திப்பார்கள். ஆகவே தொழிலாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
பெண்கள்
பெண்களைப் பொறுத்தவரையிலும் எதிலும் நிதானமாகச் செல்ல வேண்டும். புதிய பொருட்கள் வாங்க போட்ட திட்டத்தை தள்ளிவைக்க வேண்டும். ஒருசிலருக்கு வைத்தியச் செலவுகள் வந்துசேரும். மனம் எப்போதும் சஞ்சலமாக இருந்துவரும். தியானம், கோவிலுக்குச் செல்வது கைகொடுக்கும். கணவன்- மனைவி உறவுகளில் விரிசல் வராமலிருக்க விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். பிள்ளைகளால் வரும் பிரச்சினை களை பெரிதுசெய்யாதீர்கள்.
மாணவர்கள்
கல்வியில் அதிக கவனம் செலுத்தவேண்டும். எளிதில் வெற்றிபெறலாமென்று நினைத்து ஏமாந்துவிடக்கூடாது. பாடங்களை திரும்பத்திரும்ப படிப்பதன் மூலமே ஞாபகசக்தி கூடும். உயர்கல்விக்காக காத்திருக்கும் மாணவர்கள் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி திறமையைக் காட்ட வேண்டும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் சக மாணவர்களுடன் சுமுக உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். போராட்டத்தை முன்னின்று நடத்துபவர்கள் சிலரது கல்வியில் நிரந்தரத் தடை வர வாய்ப்புகள் அதிகமுள்ளது. எனவே கல்வியை மட்டும் நேசித்துச் செயல்பட வேண்டும்.
கலைஞர்கள்
ஏற்கெனவே படவாய்ப்புகள் குறைந்து வீட்டில் முடங்கிக்கிடந்த உங்களுக்கு இப்போது படவாய்ப்புகள் கூடும். ஒருசிலர் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்று வருவார்கள். 19-09-2015 முதல் 29-03-2016-க்குள் ஒருசில கலைஞர்கள் பெரிய பட்ஜெட் படங்களை தாங்களே தயாரிப்பார்கள். அதில் மாபெரும் வெற்றியும் காண்பார்கள். படப்பிடிப்பில் தொழிலாளர்கள் மிகவும் ஒத்துழைப்பாக இருப்பார்கள். கலைஞர்களுக்கு இது ஒரு நல்ல காலம்.
விவசாயிகள்
இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும். விவசாயிகள் விவசாயத்தில் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். பணப்பயிர் நடவு செய்தவர்கள் மிகுந்த லாபத்தைப் பெறுவார்கள். கதிரறுக்கும் இயந்திரம் வைத்துத் தொழில் செய்பவர்கள் நல்ல தொழிலாளியிடம் ஒப்படைக்க வேண்டும். நஷ்டம் வராமல் பார்த்துக்கொள்வது நல்லது. வெங்காயம், புகையிலை உற்பத்தி செய்கின்றவர்கள் அதிக லாபத்தைப் பெறுவார்கள்.
அரசியல் பிரமுகர்கள்
நீங்கள் செய்துவந்த நல்ல பணிகளை மக்கள் பாராட்டுவார்கள். ஒருசில அரசியல் பிரமுகர்கள், தலைமையால் பாராட்டப்பட்டு புதிய பதவிகளை அடைவார்கள். உங்கள் பொதுச் சேவையை உணர்ந்து வாரியப் பதவிகளைக் கொடுக்க தலைமை முன்வரும். உங்கள் சுய ஜாதகத்தை முழுமையாகப் பரிசீலித்து, அதற்கான பரிகாரங்களையும் மேற்கொண்டு அரசியல் களத்திற்குச் செல்லுங்கள். வெற்றி உங்கள் பக்கம் தேடிவரும்.
மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு:
மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்களில் பிறந்துள்ள உங்கள் உடல்நிலையில் சிரமங்கள் எதுவும் ஏற்படாது. கூடுதலான பணவசதிகளைப் பெறுவீர்கள். கல்வி பயிலும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த பிரச்சினைகள் குறையும். பேச்சு வார்த்தை மூலம் நல்ல தீர்வுகள் ஏற்படும். நீங்கள் செய்துவரும் தொழிலில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். அரசு ஊழியர்கள் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். 75 சதவிகித நன்மைகளை அடைவீர்கள்.
திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு:
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் நல்ல பலன்களை அடைவார்கள். உடல்நிலையில் அசௌகரியங்கள் ஏற்படாது. நிலுவைத் தொகைகள் வசூலாகும். ஒருசிலர் புதிய வீடுகட்டி குடிபுகுவார்கள். இருக்கும் இடத்தை மாற்றியமைப் பார்கள். சிலர் திட்டமிட்டபடி அயல்நாடு சென்று பொருளீட்டுவார்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். வழக்குகள் சாதகமாகும். 90 சதவிகித நன்மைகள் உண்டு
புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு:
உடல்நிலையில் சீரான நிலை ஏற்படும். பெற்றோர்கள் வழியில் ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும். நீங்கள் நேசித்த ஒருவரை இப்போது பிரிய நேரிடும். பிடிவாத குணம், உங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளது. உற்றார்- உறவினர்களோடு சுமுகமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசுப் பணியில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 65 சதவிகித ஆதாயம் பெறுவீர்கள்.
பரிகாரம்
குரு பகவானையும், முருகக் கடவுளையும் வணங்கி வரவேண்டும். ஆலயம் செல்லமுடியாதவர்கள் வியாழன்தோறும் மஞ்சள் ஆடை அணிந்து, தட்சிணாமூர்த்தியை இருந்த இடத்திலிருந்து வணங்கலாம். 27 கொண்டைக்கடலை எடுத்து மஞ்சள் துணியில் முடிந்து பர்சில் அல்லது பையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Post a Comment