இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி இலங்கை அணியுடன் 3 டெஸ்ட், 5 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரேயொரு இருபதுக்கு 20 என முழுமையான தொடரில் பங்குகொள்ளவுள்ளது. இதன் முதலாவது தொடரான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகும்.
இலங்கை அணி தனது சொந்த மண்ணில் விளையாடுகின்றபோதிலும், டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திலுள்ள இந்திய அணியை வெற்றிக் கொள்வதென்பது சவாலானதாகும். இலங்கை ஆடுகளங்கள் அதிகமாக சுழற்பந்துவீச்சுக்கு சாதகத்தன்மையைக் கொண்டதால், இரு அணிகளிலும் சுழற்பந்துவீச்சாளர்களை ஈடுபடுத்த அதிக வாய்ப்பு உண்டு. இந்த தொடரில் டெஸ்ட் தரவரிசையின் முதல் மூன்று இடங்களிலுள்ள ரவீந்திர ஜடேஜா, ரங்கன ஹேரத் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய மூவரும் பங்குகொள்கின்றமை விசேட அம்சமாகும்.
இலங்கை கிரிக்கெட் அணியில் புதிய டெஸ்ட் அணித்தலைவராக அண்மையில் நடைபெற்று முடிந்த ஸிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையேற்ற முதலாவது போட்டியில் வெற்றியும் பெற்றிருந்தார். எனினும் தற்போது வைரஸ் காய்ச்சல் பிடித்துள்ளதால் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார். இதனால் ரங்கன ஹேரத் அணித்தலைவராக செயற்படுவார்.
இரு அணிகளிலும் இளம் மற்றும் அனுபவ வீரர்கள் என கலவையாக காணப்படுகின்றனர். எனினும், இலங்கை அணியை விட இந்திய அணி சற்று முன்னேற்றகரமானதாகவே விளங்குகிறது. துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு என அனைத்திலும் இந்தியா முன்னிலையில் இருக்கின்றது.
இந்திய அணியில் ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, அஜிங்கியா ரஹானே, சேத்தேஷ்வர் புஜாரா , விராட் கோஹ்லி , லோகேஷ் ராஹுல் என பலம்பொருந்திய துடுப்பாட்ட வரிசை காணப்படுகிறது. வேகப்பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா, மொஹமட் சமி, உமேஷ் யாதவ் ஆகிய மூவர் இந்திய குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை ஈட்டிகொடுத்து வருகின்ற சகலதுறை வீரரான ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டுள்ளமை அவரின் மீது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழக வீரர்களான முரளி விஜய் மற்றும் அபினவ் முகுந்த் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இணைந்துள்ளனர்.
இலங்கை அணியை எடுத்துக்கொண்டால், உபுல் தரங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், எஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமால் ( விளையாடும் பட்சத்தில்) ஆகியோர் சிறந்து விளங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அண்மைக்காலமாக சிறந்த ஆற்றல் வெளிப்பாடுகளை வெளிக்கொண்டுவரும் தனுஷ்க குணதிலக்க , நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் துடுப்பாட்டத்திற்கு பலம் சேர்ப்பர். சகல துறை வீரரான அசேல குணரத்ன காயத்துக்குள்ளாகியுள்ளதால் இலங்கை அணி முக்கியமான கட்டத்தில் அவரை இழந்துள்ளது. சுழற்பந்துவீச்சில் ரங்கன ஹேரத்துக்கு பக்கபலமாக தில்ருவன் பெரேரா விளங்குவார் என்பதில் சந்தேகமில்லை. டெஸ்ட் அரங்கில் 376 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ரங்கன ஹேரத் இத்தொடரில் 400 விக்கெட்டுகள் என்ற மைல் கல்லை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்துவீச்சில் சுரங்க லக்மால், நுவன் பிரதீப், லஹிரு குமார, விமுக்தி பெர்னாண்டோ காணப்படுகின்றனர்.
இதேவேளை இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சமிந்த வாஸ் இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பலமாகும். அவரின் திறமை மற்றும் அனுபவம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிறந்த பயனை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்விரு அணிகளும் இதுவரை 38 டெஸ்ட் போட்டிகளில் சந்தித்து 16 போட்டிகளில் இந்தியாவும் , 7 போட்டிகளில் இலங்கையும் வெற்றியீட்டியுள்ளன. 15 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன. சர்வதேச ஒருநாள் அரங்கில் 150 போட்டிகளில் விளையாடி 83 போட்டிகளில் இந்தியாவும், 55 போட்டிகளில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளதுடன் 11 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை, ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளில் இந்தியா 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் இலங்கை 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment