இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். பவுலிங் பயிற்சியாளர் பொறுப்பு ஜாகிர் கானுக்கு வழங்கப்பட்டது.
கேப்டன் கோஹ்லியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ளே விலகினார். இதையடுத்து புதிய பயிற்சியாளர் தேர்வுக்கு இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) 10 பேர் விண்ணப்பித்தனர்.
வரும் ஜூலை 26ல் இலங்கை மண்ணில் துவங்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க, இந்திய அணி செல்கிறது. இதற்கு முன் பயிற்சியாளர் தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டது. இதையடுத்து, சச்சின், கங்குலி, லட்சுமண் அடங்கிய பி.சி.சி.ஐ., ஆலோசனைக்குழு நேர்காணல் நடத்தியது. இதில் சேவக் மட்டும் நேரில் பங்கேற்றார். லண்டனில் உள்ள ரவி சாஸ்திரி ‘ஸ்கைப்’ வழியாக பேசினார். கேப்டன் கோஹ்லியிடம் ஆலோசித்த பின் உரிய முடிவு எடுக்கப்படும் என கங்குலி தெரிவித்தார்.
இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்படுவதாக பி.சி.சி.ஐ., தற்காலிக செயலர் சி.கே.கண்ணா தெரிவித்தார். இவர் கூறுகையில்,‘‘ஆலோசனை குழுவின் பரிந்துரையின் பேரி்ல் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளராக ஜாகிர் கான் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் இரண்டு ஆண்டு காலம்(2019 வரை) பணியில் நீடிப்பர்,’’என்றார்.
டிராவிட் ஆலோசகர்:
இந்திய அணியின் ‘பெருஞ்சுவர்’ என வர்ணிக்கப்படும் டிராவிட், ‘பேட்டிங்’ ஆலோசகராக செயல்பட உள்ளார். அன்னிய தொடர்களின் போது இவர் ஆலோசனைகள் வழங்குவார்.
நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்...
இந்திய கிரிக்கெட்டின் ‘கிங் மேக்கராக’ கேப்டன் கோஹ்லி திகழ்கிறார். இவர் கை காட்டுபவருக்கு தான் பதவி கிடைக்கிறது. தனக்கு பிடிக்காத கும்ளேவை விரட்டினார். தனக்கு பிடித்த ரவி சாஸ்திரியை தலைமை பயிற்சியாளராக்கி அழகு பார்க்கிறார். இவர்களுக்கு இடையே நல்ல புரிதல் இருப்பதால், இந்திய அணி வெற்றிப் பாதையில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஆபத்பாந்தவான்’
இந்திய அணிக்கு இக்கட்டான நேரத்தி்ல் கைகொடுப்பவர் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி, 55,மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் 80 டெஸ்ட், 150 ஒருநாள் போட்டியில் விளையாடினார். ஓய்வுக்கு பின் வர்ணனையாளர், கட்டுரையாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என, பல அவதாரம் எடுத்தார்.
கடந்த 2007ல் பயிற்சியாளராக இருந்த கிரெக் சாப்பல் சர்ச்சைக்குரிய முறையில் வெளியேற, இந்திய அணியின் மானேஜராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். ஒரு ஆசிரியர் போல கிரிக்கெட் நுணுக்கங்களை வீரர்களுக்கு பொறுமையாக கற்று தந்தார்.
பின் 2014–16ல் இந்திய அணியின் இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார். இவரது கண்காணிப்பில் டெஸ்டில் 5 வெற்றி (1 தோல்வி, 2 ‘டிரா’), ஒருநாள் அரங்கில் 7 வெற்றி (9 தோல்வி), ‘டுவென்டி–20’ கிரிக்கெட்டில் 14 வெற்றி (6 தோல்வி) இந்திய அணிக்கு கிடைத்தது.
வருகிறார் ஜாகிர்
இந்திய அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், 38. மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். டெஸ்டில் 311, ஒருநாளில் 282, ‘டுவென்டி–20’ல் 17 என, சர்வதேச அரங்கில் 610 விக்கெட்டுகள் வீழ்த்திய அனுபவம் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட உதவும்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment