நோயல் க்ரூஸ் அமெரிக்காவின் புகழ்பெற்ற பொம்மை கலைஞர். இவர் புதிதாகப் பொம்மைகளை உருவாக்குவதில்லை. ஏற்கெனவே இருக்கும் பொம்மைகளில், தன் கைவண்ணத்தால் புகழ்பெற்றவர்களின் உருவத்தைக் கொண்டு வந்துவிடுகிறார்! “நான் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவன். என் வாழ்க்கையில் மனிதர்களின் முகங்களைத்தான் அதிகம் வரைந்திருக்கிறேன். 12 வயதில் பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
உலக அழகிப் போட்டிகளில் விதவிதமான அழகான பெண்களைப் பார்த்தேன். உடனே முகங்களை வரைய வேண்டும் என்ற ஆசை வந்தது. 16 வயதில் விற்பனை செய்யும் அளவுக்கு ஓவியங்களை வரைய ஆரம்பித்துவிட்டேன். பிறகு குடும்பத்துடன் அமெரிக்கா வந்து சேர்ந்தேன். வெகு சமீபத்தில்தான் பொம்மைகளை மறு உருவாக்கம் செய்துவருகிறேன். ஒரு பொம்மையை வாங்கி, அது எந்தப் பிரபலத்துக்குச் சரியாக வரும் என்று நினைத்துப் பார்ப்பேன்.
பிறகு பிரபலத்தின் புகைப்படத்தைப் பார்த்து, பொம்மையை அச்சு அசலாக உருவாக்கிவிடுவேன். ஏஞ்சலினா ஜோலி, எம்மா வாட்சன், ஒண்டர் வுமன், மெரில் ஸ்ட்ரீப், டேனியல் ராட்க்ளிஃப் போன்ற பிரபலங்களின் திரைப்படக் கதாபாத்திரங்களை உருவாக்கி வைத்திருக்கிறேன். மைக்கேல் ஜாக்சன், டயானா போன்றவர்களின் பொம்மைகளையும் செய்திருக்கிறேன். நான் குழந்தைகளுக்காக பொம்மைகளைச் செய்வதில்லை. என்னுடைய பொம்மைகளை வசதியானவர்கள் மட்டுமே வாங்க முடியும். 32 ஆயிரத்திலிருந்து 2.25 லட்சம் ரூபாய் வரை என்னிடம் பொம்மைகள் இருக்கின்றன” என்கிறார் நோயல் க்ரூஸ்.
சாதாரண பொம்மை, அசாதாரணமாக மாறும் அற்புதம்!
பூச்சியினங்களில் ஒன்று Praying Mantis. முன்னங்கால்களை நீட்டிக்கொண்டு நிற்பதால் இதைக் ’கும்பிடு பூச்சி’ என்று அழைக்கிறார்கள். பிற பூச்சிகள், சிறு விலங்குகளை இவை உணவாக உட்கொள்கின்றன. தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்றில் கும்பிடு பூச்சிகள், சிறிய பறவைகளைக் கொன்று சாப்பிடுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அண்டார்டிகாவைத் தவிர, அனைத்துக் கண்டங்களிலும் நடத்தப்பட்ட ஆய்வில் இது நிரூபணமாகியிருக்கிறது.
1867-ம் ஆண்டிலேயே இது குறித்து ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டாலும், 2000 2015 ஆண்டுகளில்தான் 67% ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 13 நாடுகளில் நடைபெற்ற 147 நிகழ்வுகள் மூலம் இந்த ஆய்வு வெளியிடப்பட்டிருக்கிறது. கும்பிடுபூச்சிகளுக்கு அதிகம் பலியாவது ஹம்மிங் பறவைகள்தான். ஹம்மிங் பறவையின் தலையைத் தாக்கி, மூளையைச் சாப்பிடுகின்றன. அமெரிக்காவில் கும்பிடுபூச்சிகளின் வேட்டையில் 70% ஹம்மிங் பறவைகள்தான் சிக்கியிருக்கின்றன.
ஹம்மிங் பறவைகளை இங்கு அதிகமாக வளர்ப்பதால், கும்பிடுபூச்சியின் வேட்டைகளை வீட்டிலுள்ளவர்கள்கூட எளிதாகப் படம் பிடித்துள்ளனர். பறவைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் கும்பிடு பூச்சிகள் முக்கியப் பங்காற்றுகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Post a Comment