
அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து திரையரங்க உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''முதலில் பொதுமக்களுக்கு வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஒத்துழைப்புக்கும், பொறுமைக்கும் நன்றி. 4-வது நாளாக இன்றும் சுமார் 1,000 திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. இதனால் ரூ.20 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அரசுடன் பல்வேறு கட்டங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அமைச்சர்கள் ஜெயக்குமார், வீரமணி, வேலுமணி மற்றும் கடம்பூர் ராஜு உள்ளிட்டவர்களும், அரசு அதிகாரிகளும் எங்களின் சிரமங்களைப் புரிந்துகொண்டனர்.
வரி வேண்டுமா, வேண்டாமா என்று முடிவெடுக்க அரசு தரப்பிலும், எங்களின் தரப்பிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. முடிவு எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இதனைத் தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் திரையரங்குகள் திறக்கப்படும். திரைத்துறையினர் சார்பில் 8 பேர் குழுவில் உள்ளனர். அரசுத்தரப்பில் எவ்வளவு பேர் என்று தெரியவில்லை.
வழக்கமான கட்டணத்தோடு ஜிஎஸ்டி
டிக்கெட் கட்டணம் எப்போதும் போல இருக்கும். ஆனாம் அத்துடன் மற்றைய பொருட்களைப் போல ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.
டிக்கெட் விலை ரூ.153?
வழக்கமான டிக்கெட் விலை 120 ரூபாயோடு, 28% ஜிஎஸ்டி 33.06 ரூபாய் சேர்த்து புதிய டிக்கெட்டின் விலை ரூ.153 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment