உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் பிள்ளைகளை அணைத்து, பொலிஸ் அதிகாரியின் பூதவுடல் முன்பாக நீதிபதி மா.இளஞ்செழியன் அழுதுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் பூதவுடல் நேற்று மதியம், யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பொலிஸ் வாகனத் தொடரணியாக அவரது பூதவுடல் கொண்டு செல்லப்பட்டது.
இந்தத் தொடரணியுடன் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மற்றும் மாவட்ட நீதிபதிகளும் சென்றிருந்தனர். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற உத்தியோகத்தர்களும் சென்றனர். சிலாபத்தை நேற்று முன்னிரவு சென்றடைந்தனர்.
அங்கு உறவினர்களிடம் பூதவுடல் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்த பொலிஸாரின் காலில் தொட்டு வணங்கினார் நீதிபதி இளஞ்செழியன். இதன் பின்னர் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் பிள்ளைகள் இருவரையும் தனித் தனியே அணைத்து, கதறி அழுதார். இந்தச் சம்பவம் பார்ப்பவர்களையும் கண் கலங்க வைத்தது.
இதன் பின்னர், நீதிபதிகள் குழுவினர் வடக்கு நோக்கிப் புறப்பட்டனர். உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் இறுதிக் கிரியை நாளை மறுதினம் புதன் கிழமை பெரும்பாலும் இடம்பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Post a Comment