“நல்லூரில் நீதிபதி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அரசு ஆழமாக சிந்தித்துச் செயற்படவேண்டும்.
விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாகும் காலப்பகுதியில் இவ்வாறான சம்பவங்களே வடக்கில் இடம்பெற்றன” இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை, வீரகெட்டிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“யாழ்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது நடத்தப்பட்டுள்ள துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றையவர் படுகாயமடைந்துள்ளார். 15 வருடங்களுக்கு மேலாக தமிழ் நீதிபதியொருவருக்கு பாதுகாப்பு வழங்கிவந்த அதிகாரியே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுடன் பேசி விடயங்களை அறிந்தேன். ‘என்னை இலக்குவைத்து பாய்ந்த துப்பாக்கித் தோட்டாவையே அந்த அதிகாரி தனது மார்பில் தாங்கி எனது உயிரைக் காத்தார்’ என நீதிபதி கூறினார். இது வீரச் செயலாகும். அந்த அதிகாரிக்கு சண்மானம் வழங்கப்படவேண்டும்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் வேறுகோணத்தில் கதைகூறுகின்றனர். நீதிபதியும், சம்பவத்தில் காயமடைந்த பொலிஸாரும் ஒரு விதத்திலும், பொலிஸார் மற்றுமொரு கோணத்திலுமே கருத்து வெளியிட்டுள்ளனர்.
எது எப்படியோ நீதிபதி சொல்வதை நாம் ஏற்கவேண்டும். ஆகவே, இது பற்றி உடனடியாக விசாரணை நடத்தப்படவேண்டும்.
பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்யும் அளவுக்கு நாட்டின் சட்டமும், ஆட்சியும் பலவீனமடைந்துள்ளது.
இது பாரதூரமான விடயமாகும். இவ்வானதொரு சம்பவம் அண்மையில் கொழும்பிலும் நடைபெற்றது. இதில் இரண்டு அதிகாரிகள் உயிரிழந்தனர். சிறைச்சாலை அதிகாரிகளும் உயிரிழந்தனர்.
தற்போது யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்றுள்ளது. எனினும், யாழ்பாணத்தில் இப்படியான சம்பவம் இடம்பெறும்போது சற்று விழிப்பாக இருக்கவேண்டும். கொழும்பில் நடைபெற்றால் பாதாள உலகக் குழுவினர் செய்திருக்கலாம் எனக் கூற முடியும். ஆனால், அதற்கும் மேலான சம்பவங்களே யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றன.
விடுதலைப் புலிகள் உருவாகும் காலப்பகுதியில் இவ்வாறான சம்பவங்களே இடம்பெற்றன. எனவே, இது பற்றி அரசு ஆழமாக சிந்தித்து செயற்படவேண்டும்” என்று மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

Post a Comment