இதன்போது திருகோணமலையில் திரவ இயற்கை வாயு தொழிற்சாலையை அமைப்பதற்கு இந்திய ஜப்பான் இணைந்த கூட்டு நிறுவனத்திற்கு அனுமதி அளிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. சுமார் ஒருமணிநேரம் இடம்பெற்ற கடும் வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் இதனை அமைப்பதற்கான அனுமதியை வழங்குவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தின் போது ஐக்கிய தேசியக்கட்சி அமைச்சர்கள் திருகோணமலையில் திரவ இயற்கை வாயு தொழிற்சாலையை அமைப்பதற்கு இந்திய நிறுவனத்திற்கு அனுமதி வழங்கவேண்டும் என்று வாதிட்டுள்ளனர். சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் இதற்கு எதிராக வாதிட்டதாகவும் தெரியவருகின்றது. இருதரப்பினரும் ஒருமணிநேரம் வாதப் பிரதிவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு குத்தகைக்கு வழங்கியுள்ளமையினால் திருகோணமலையில் இந்திய நிறுவனம் திரவ இயற்கை வாயுத் தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்கு அனுமதி அளிக்கவேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் அது பெரும் பிரச்சினையாக மாறும் நிலை காணப்படுகின்றது என்று சில அமைச்சர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த திரவ இயற்கை வாயு தொழிற்சாலையை அமைப்பதற்கு கொரியாவும் விலை மனுக்கோரியுள்ளது. எனவே இந்த விலைமனுவிற்கேற்பவும் இதன் நிபந்தனைகளுக்கு அமையவும் இதற்கான அனுமதியினை இந்திய , ஜப்பான் இணைந்த கூட்டு நிறுவனத்திற்கு வழங்குமாறு கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தின் போது கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திருகோணமலை சம்பூரில் அனல் மின்நிலையம் அமைப்பதற்கு இந்தியாவிற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் சுற்றுச்சூழல் பாதிப்பை காரணம் காட்டி அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது. அதேபோன்று தற்போது திரவ இயற்கை வாயு தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்கு இந்திய ஜப்பான் கூட்டு நிறுவனத்திற்கு அனுமதி அளித்து விட்டு அதனை ரத்து செய்ய முயன்றால் அது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று கூறியதாக தெரிகின்றது.
இதனையடுத்து திருமலையில் திரவ இயற்கை வாயு தொழிற்சாலையை இந்திய ஜப்பான் இணைந்த கூட்டு நிறுவனத்திற்கு வழங்குவது என்று அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கூட்டுறவு சங்கங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி விதிப்பினையும் இரத்துச் செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Post a Comment