தேர்தலை பிற்போடும் திட்டத்திலே அரசியல் கட்சிகளுக்கிடையில் அலரி மாளிகையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. அதில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கே கூட்டு எதிர்க்கட்சி அக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அத்துடன் தொடர்ந்து தேர்தல்கள் பிற் போடப்படுமானால் தேர்தல்கள் ஆணைக்குழு நூதனசாலையாக மாறும் நிலையே ஏற்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
சோசலிஷ மக்கள் முன்னணி நேற்று முன்தினம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
மக்களின் வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை தொடர்ந்தும் மீறுவதற்கு மக் கள் இடமளிப்பார்கள் என அரசாங்கம் நினைத்து கொண்டிருக்கின்றது. அத்துடன் தேர்தலை பிற்போடுவதற்கு இரண்டு வருடங்களாக பல காரணங்களை தெரிவித்து வருகின்றது. இதன் காரணமாக பிரதேச சபைகளுக்குட்பட்ட கிராமங்கள் எந்த அபிவிருத்தியும் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்டிருக்கும் அனர்த்தங்களுக்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும்.
அத்துடன் அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாப்பதாக தெரிவித்து வருகின்றது. ஆனால் மக்களின் சர்வஜன வாக்குரிமை மீறப்பட்டு வருகின்றமை தொடர்பாக எந்த மனித உரிமை அமைப்புகளும் கதைப்பதில்லை. மக்களின் ஜனநாயக உரிமையில் வாக்குரிமையே பிரதானமாகும். அதிலிருந்தே ஏனைய உரிமைகள் தங்கியுள்ளன. ஆனால் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு எந்த சர்வதேச அமைப்புகளும் அழுத்தம் கொடுப்பதாக தெரியவில்லை.
அதனால் மக்களின் தேர்தல் உரிமையை அரசாங்கம் தொடர்ந்தும் மீறி வருவத னால், அரசாங்கம் உணரும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து உரிய பதில் ஒன்றை கொடுக்கவுள்ளோம். அதற்கான வேலைத்திட்டத்தை தற்போது நாங்கள் மேற்கொண்டு செல்கின்றோம். அதற்குள் அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கா விட்டால் மக்கள் தங்களின் வாக்குரிமையை பாதுகாக்க வீதிக்கிறங்குவார்கள்.
எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்து பிற்போடுவதற்கே பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் அரசியல் கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. அதில் மாட்டிக் கொள்ளாமல் இருப்ப தற்கே கூட்டு எதிர்க்கட்சி அதில் கலந்து கொள்ளவில்லை. அத்துடன் மக்களின் வாக்குரிமையை மீறி வரும் அரசாங்கம் உணரும் வகையில் எதிர்வரும் சில தினங் களில் உரிய பதிலொன்றை கொடுப்போம் என்றார்.
Post a Comment