அமைச்சர்கள் மற்றும் அமைச்சு அதிகாரிகள் சிலர் வெளிநாட்டுப் பயணங்களின்போது குறித்த காலப்பகுதிகளுக்கு மேலதிகமாக அங்கு தங்குகின்றனர். ஆகவே இந்த விடயத்தில் அமைச்சு மட்டத்தில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.மேலும் கடந்த இரண்டு வருட காலத்தில் அமைச்சுக்களின் மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் குறித்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர்களின் செயலாளர்களிடம் கோரியுள்ளார்.
அத்துடன் ஐந்து வருடம் ஒரு பிரதேச செயலகத்தில் கடமையாற்றியவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சு செயலாளர்களுக்கான விசேட கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இதன்போது கடுமையான தீர்மானங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ளார்.இதன்போது ஜனாதிபதி குறிப்பிடுகையில்,
நாட்டினதும் பொதுமக்களினதும் அபிவிருத்தி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அனைத்து அமைச்சுக்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு மட்டும் அனைத்து விடயங்களையும் சாட்டிவிடாது, குறித்த திட்டத்தை வெற்றிபெறச்செய்வதற்கு தமது முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டியது அனைத்து அமைச்சின் செயலாளர்களினதும் பொறுப்பாகும்.
வெளிநாட்டு பயணங்களுக்கு கட்டுப்பாடு
அமைச்சர்கள் மற்றும் அமைச்சு அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணங்களின்போது உயர்மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். .சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அரச மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று அம் மாநாடுகள் நிறைவுபெற்றதன் பின்னரும் மேலும் சில நாட்கள் அந்நாடுகளில் தங்குகின்றனர். இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு ஒவ்வொரு வருடமும் ஒரே அதிகாரி வெளிநாடுகளுக்குச் செல்வதற்குப் பதிலாக வெவ்வேறு அதிகாரிகளைப் பயிற்றுவிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பிரதேச செயலாளர்களுக்கு இடமாற்றம்
எந்த ஒருவரின் தேவைக்காகவும் ஒரு பிரதேச செயலாளரை ஒரே இடத்தில் வைத்துக்கொள்ள முடியாது. ஆகவே ஐந்து வருடம் ஒரு பிரதேச செயலகத்தில் கடமையாற்றியவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும். இடமாற்றங்கள் தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.
ஒப்பந்தங்களை ஆராய மேலதிக செயலாளர்
நான் ஜனாதிபதி பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களின்போது பல்வேறு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. அந்த உடன்படிக்கைகளில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை நோக்கி பயணித்து அவற்றை நடைமுறைப்படுத்தவும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அமைச்சு மட்டத்தில் பொறுப்புக்கூறும் மேலதிக செயலாளர் ஒருவரை நியமித்து அதற்காக தனியான ஒரு பிரிவை பேணுவதற்கு அமைச்சுக்களின் செயலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரு வருட செயற்பாடுகள் குறித்து அறிக்கை
அடுத்த இரண்டு வாரங்களில் அனைத்து அமைச்சுக்களினதும் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்களை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளேன். கடந்த இரண்டரை வருட காலத்தில் அமைச்சுக்களின் செயற்பாடுகள் மற்றும் 2020 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்ட நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து செயலாளர்கள் எனக்கு இரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அமைச்சுகளில் உள்ள வெற்றிடங்களை துரிதமாக நிரப்ப வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித நடவடிக்கை எடுங்கள்
அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.
அரசாங்க வேலைத்திட்டங்களை தெளிவுபடுத்த ஊடக அதிகாரிகளை நியமியுங்கள்
அமைச்சு மட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு அமைச்சு மட்டத்தில் ஊடக அதிகாரிகளை நியமித்து அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடாக மக்களுக்கு தெளிவுப்படுத்தும் பிரசாரங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நிறைவேற்றப்படவேண்டிய நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் இதனைப் பார்க்கிலும் கூடுதல் பொறுப்புடன் செயற்படவேண்டியதன் அவசியம். இதன்படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அமைச்சு செயலாளர்களை சந்தித்து அமைச்சு நடவடிக்கைகள் குறித்து கண்டறிய நான் எதிர்பார்த்துள்ளேன்.
வரட்சி, உமாஓயா குறித்தும் அவதானம் செலுத்திய ஜனாதிபதி
வரட்சி நிலவும் பிரதேசங்களில் உள்ள மக்களின் குடிநீர் தேவை உள்ளிட்ட ஏனைய வசதிகள் குறித்தும் உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அமைச்சு மட்டத்தில் வழங்கப்பட்ட பொறுப்புக்களை உரிய காலத்தில் நிறைவேற்றுவது குறித்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது அமைச்சு செயலாளர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
Post a Comment