திருப்பதி மலைப்பாதை வழியாக நடந்து சென்று சுவாமியைத் தரிசிக்கும் பக்தர்களுக்குத் தினமும் 20,000 திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்க தேவஸ்தானம் ஒப்புதல் வழங்கி உள்ளது. திருப்பதி ஏழுமலையானைத் தினமும் அலிபிரி மற்றும் வாரி மெட்டு ஆகிய இரு மலைப்பாதை வழியாகச் சென்று, 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தி வருகின்றனர்.
இவ்வாறு தரிசனம் செய்யும் பகதர்களை ‘திவ்ய தரிசனம்’ எனும் பெயரில் திருப்பதி தேவஸ்தானம் ஊக்குவித்து வந்தது. மலைப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு இலவசமாக டோக்கன் வழங்குவதுடன், 2 லட்டும், கூடுதலாக ரூ.10-க்கு 4 மானிய விலையில் லட்டு பிரசாதமும் வழங்கப்படுகிறது. இவ்வழியாக செல்லும் பக்தர்கள், ஏழுமலையானை 2 அல்லது 3 மணி நேரத்திற்குள் தரிசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் முதல் பிரதி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திவ்ய தரிசனம் முறை ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்தது. மேலும் லட்டு பிரசாதம் வழங்குவதன் மூலம் தேவஸ்தானத்திற்கு தினமும் ரூ. 10.5 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் பழைய முறையில் திவ்ய தரிசனம் அமலுக்கு வந்தது. இதன்படி தினமும் 20,000 பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Post a Comment